×

கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை திறக்க வாய்ப்பில்லை: ஐகோர்ட்டில் சிஎம்டிஏ தகவல்

சென்னை: கோயம்பேடு உணவு தானிய மொத்த விற்பனை சந்தையை திறக்க வாய்ப்பில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் சிஎம்டிஏ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தகவல் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனாவின் கோர தாண்டவம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை மற்றும் புறநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதற்கு, கோயம்பேடு  மார்க்கெட் தான் காரணம் என்று அனைவரும் குற்றச்சாட்டு கூறும் நிலை ஏற்பட்டுள்ளது. கொரோனா உற்பத்தி சந்தையாக மாறிய கோயம்பேடு மார்க்கெட்டை மூடுவதாக தமிழக அரசு கடந்த 4-ம் தேதி அறிவித்தது.

இருப்பினும், பொதுமக்களுக்கு காய்கறிகள் தங்கு தடையின்றி கிடைக்கவும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருட்கள் மக்களை சென்றடையவும் சென்னை திருமழிசையில் தற்காலிகமாக காய்கறி மொத்த விற்பனை அங்காடியை அரசு தொடங்கியுள்ளது. இந்நிலையில் கோயம்பேடு உணவு தானிய வியாபாரிகள் சங்க தலைவர் சந்திரேசன் உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் விதமாக ஏப்ரல் 24ம் தேதி 4 நாட்கள் சென்னை, மதுரை, கோவை ஆகிய மாவட்டங்களில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

அதனால், காய்கறிகளை வாங்க கோயம்பேடு மார்கெட்டில் சில்லறை விற்பனை சந்தையில் மக்கள் குவிந்ததால் கொரோனா தொற்று பரவியது. இதனால் மே 5ம் தேதி முதல் கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டது. சில்லறை காய்கறி விற்பனைக்கும், உணவு தானிய விற்பனைக்கும் தொடர்பு இல்லாத நிலையில் அனைத்து வளாகங்களும் மூடப்பட்டதால், உணவு தானியம் விற்பனை செய்யும் எங்கள் கடைகளும் மூடப்பட்டன. எந்த முன் அறிவிப்பும் இல்லாமல்  உணவு தானிய மொத்த விற்பனை கடைகள் மூடப்பட்டதை பயன்படுத்தி சிலர் உணவு தானிய பொருட்களின் விலைகளை உயர்த்தி வருகின்றனர்.

காய்கறி சந்தைக்கு திருமழிசை தற்காலிக மார்க்கெட்டில் இடம் ஒதுக கிய அதிகாரிகள் உணவு தானிய வியாபாரிகளுக்கு எந்த ஏற்பாடும் செய்யவில்லை. எனவே, கோயம்பேடு உணவு தானிய சந்தைக்கு  வைக்கப்பட்ட சீலை அகற்றி உரிய பாதுகாப்புடன் மீண்டும் திறக்க சிறப்பு அதிகாரி, சி.எம்.டி.ஏ, மாநகராட்சி மற்றும் காவல்துறை ஆணையருக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு இன்று ஐகோர்ட்டில் நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது சிஎம்டிஏ சார்பாக ஆஜரான வழக்கறிஞர்; கொரோனா தொற்று அதிக அளவில் இருப்பதால் உணவு தானிய சந்தையை தற்போது திறக்க வாய்ப்பில்லை என கூறினார். அப்போது இதுகுறித்து பதிலளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதி, தேவைப்படும் பட்சத்தில் அந்த கடை உரிமையாளர்கள் கடையில் உள்ள பொருட்களை எடுக்க துறை சார்ந்த அதிகாரியை நாடலாம் எனவும் கூறினார். இதனையடுத்து வழக்கு விசாரணையை ஜூன் 5-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Tags : Coimbatore ,CMDA , Coimbatore, Sales Market, Icord, CMDA
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...