×

ஊரடங்கை நீட்டிக்கலாமா? தளர்த்தலாமா? என்ற குழப்பத்தில் தமிழக அரசு; மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி நாளை மீண்டும் ஆலோசனை...!

சென்னை: தமிழகத்தில் நாளை மறுநாளுடன் (30-ம் தேதி) ஊரடங்கு முடிவடையவுள்ள நிலையில், தமிழகத்தில் கொரோனா நோய் தொற்றும், இறப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து  2-வது இடத்தில் உள்ளது. இதனால், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், விமானம், ரயில் சேவையை தொடர்ந்து பேருந்துகளை இயக்கலாமா? என்பது குறித்தும் கொரோனா தொடர்பான மருத்துவ நிபுணர்களுடன் சென்னை  தலைமை செயலகத்தில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 26-ம் தேதி ஆலோசனை நடத்தினார்.

அப்போது, கொரோனா தொற்று கட்டுப்பாட்டுக்குள் வரும் வரை சென்னைக்கு எந்த தளர்வும் அறிவிக்கக் கூடாது. அதேபோல், தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்க கூடாது, சென்னையை தவிர பிற மாவட்டங்களில்  தொற்று குறைந்து இருந்தாலும் பொது போக்குவரத்தை அனுமதிக்க கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் குழு தமிழக அரசுக்கு பரிந்துரைத்துள்ளனர்.

இதனை தொடர்ந்து, 5வது கட்ட ஊரடங்கு அறிவிக்கலாமா அல்லது அதிகளவில் தளர்வுகள் வழங்கலாமா என்பது குறித்து சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன்  காணொலி காட்சி மூலம் இன்று ஆலோசனை நடத்தினார். இதனையடுத்து, மீண்டும் நாளை கொரோனா தொடர்பான மருத்துவ நிபுணர்கள் குழுவுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை நடத்தவுள்ளார். நாளை நடைபெறும் ஆலோசனை  கூட்டத்திற்கு பின் ஊரடங்கு நீட்டிப்பா? தளர்வா? என்பது குறித்து தெரியவரும் என்று கருதப்படுகிறது.


Tags : Government ,Tamil Nadu ,Talarttalama ,CM Palanisamy , Extend curfew? Talarttalama? Government of Tamil Nadu in confusion; CM Palanisamy to consult again tomorrow
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...