×

பாம்பன் குந்துகால் கடற்கரையில் பயன்பாட்டுக்கு வரும் முன்பே படகு நிறுத்தும் பாலம் சேதம்

* பலத்த காற்று, கடலரிப்பால் பரிதாபம்

ராமேஸ்வரம்: மன்னார் வளைகுடா கடல் பகுதியில் வீசி வரும் பலத்த காற்று மற்றும் கடல் அரிப்பால், பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில் சுற்றுலா படகு நிறுத்தும் பாலம் சேதமடைந்தது. மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த 2 நாட்களாக பலத்த காற்று வீசி வருவதால் கடல் சீற்றமாக உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவில் வீசிய பலத்த காற்றினாலும், கடல் கொந்தளிப்பினாலும் மன்னார் வளைகுடா கரையோர பகுதியில் பல இடங்களில் மணல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. ராமேஸ்வரம் அருகே பாம்பன் குந்துகால் கடற்கரை பகுதியில், சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் பகுதியில் ஏற்பட்ட கடலரிப்பினால், கரையோரத்தில் 4 அடி உயரத்திற்கு மணல் கடலுக்குள் இழுத்து செல்லப்பட்டு பள்ளமாகி விட்டது.

இதன் அருகில் மன்னார் வளைகுடா உயிர்க்கோள காப்பக வனத்துறையால், கடந்த ஆண்டில் குருசடை தீவை சுற்றிப்பார்க்க சுற்றுலா படகு நிறுத்தும் ஜெட்டி பாலம் கட்டப்பட்டது. பல லட்சம் ரூபாய் செலவழித்து மரத்தினால் பாலம் கட்டி முடிக்கப்பட்டும், இதுநாள் வரை இத்திட்டம் துவக்கப்படாமல் இருந்தது. 2 நாட்களாக மன்னார் வளைகுடா கடலில் நிலவி வரும் பலத்த காற்று மற்றும் கடல் சீற்றம், கடல் அரிப்பினால், சுற்றுலா படகு சவாரி திட்டத்திற்காக கட்டப்பட்ட ஜெட்டி பாலம் உடைந்து சேதமடைந்துள்ளது. சாதாரண கடல் சீற்றத்திற்கே மரப்பாலம் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில், இதன் உறுதித்தன்மையில் கேள்விக்குறி எழுந்துள்ளது. மேலும், தீவுகளை சுற்றிப்பார்க்க படகு சவாரி துவங்குவது பயணிகளுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்று மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மக்கள் பணம் பல லட்சம் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது.

Tags : bridge ,beach ,Pompon Squall , Damage , stopping,boat before ,Pompon Squall beach
× RELATED அமெரிக்கா பால்டிமோர் பால விபத்தில் 6 தொழிலாளர்கள் பலி!