×

அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தம் நாகர்கோவிலில் தலை தூக்கிய குடிநீர் தட்டுப்பாடு: 15 நாட்களுக்கு ஒருமுறை கூட தண்ணீர் வினியோகம் செய்வதில் சிக்கல்

நாகர்கோவில்:  நாகர்கோவிலில் குடிநீர் தட்டுப்பாடு தலை தூக்கி உள்ளது. 15 நாட்களுக்கு மேல் ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வராததால், மக்கள் பீதி அடைந்துள்ளனர். நாகர்கோவில் மாநகராட்சி பகுதி மக்களுக்கு, முக்கடல் அணையில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. 25 அடி கொள்ளளவு கொண்ட  இந்த அணை தண்ணீர் போதுமானதாக இல்லை. கோடை காலங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும். கடந்த வருடம் பெய்த மழையால் முக்கடல் அணை நீர் மட்டம் 25 அடியை எட்டியது. பின்னர் கோடையில் அணை நீர் மட்டம் மளமளவென குறைந்தது. மைனஸ் அளவுக்கு சென்ற நீர்மட்டம் நேற்று காலை 8 மணி நிலவரப்படி 0.6 அடியாக இருந்தது. அணை வற்றிய நிலையில், பேச்சிப்பாறையில் இருந்து அனந்தனார் சானலில் திறக்கப்பட்ட சுமார் 40 கன அடி தண்ணீரை பம்பிங் செய்து, மாநகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில் தற்போது சானல் தூர்வாரும் பணிகள் நடக்கின்றன. இதனால் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே குடிநீர் தட்டுப்பாடு காரணமாக, நாகர்கோவில் மாநகரில் 15 நாட்களுக்கு ஒருமுறை தான் குடிநீர் வினியோகம் நடைபெறுகிறது. இதற்கு முன் ஒரு வாரத்துக்கு ஒரு தடவை தண்ணீர் வந்தது. அணைகளில் தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டு உள்ளதால் இனி 15 நாட்களுக்கு ஒருமுறை கூட தண்ணீர் திறக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
பாசனத்துக்காக அணை திறந்து தண்ணீர் பாசன கால்வாய்களுக்கு வந்து சேரும் போது அதை பம்பிங் செய்து எடுக்கலாம் என்பது மாநகராட்சியின் திட்டமாக உள்ளது. அதுவரை குடிநீர் சப்ளைக்கு என்ன செய்ய என்ற நிலை உருவாகி உள்ளது. மாநகரின் பல இடங்களில் 15 நாட்களுக்கு மேல் குடிநீர் வர வில்லை. இன்னும் சில நாட்கள் இதே நிலை நீடித்தால் மக்கள் குடங்களுடன் சாலையில் போராட வர வேண்டிய நிலை உருவாகும்.  கொரோனா பிரச்னை இருப்பதால் கலெக்டர் முதல் அனைத்து முதல் நிலை அதிகாரிகளும் அந்த பணியில் தான் உள்ளனர். இந்த நிலையில் குடிநீர் தேவையை சமாளிக்க என்ன செய்வது என தெரியாமல் மாநகராட்சி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர். அனந்தனார் சானலில் தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுத்தால், நிைலமையை ஓரளவு சமாளிக்க முடியும் என்பது பொதுமக்களின் கோரிக்கை ஆகும்.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக மலையோர பகுதியில் பெய்த மழையால் அனந்தனார் சானலில் தண்ணீர் ஓரளவு செல்கிறது. சுருளகோடு பகுதியில், இந்த தண்ணீர் வேகமாக செல்லும் வகையில் அந்த பகுதியில் உள்ள பாசிகளை அகற்றுவதுடன், அனந்தனார் கால்வாய் தண்ணீர் செல்லும் தரை மட்ட நீர்தேக்க ெதாட்டிக்கு பம்பிங் செய்ய வசதியாக மணல் மூட்டைகளையும் சானலில் அடுக்கி உள்ளனர். ஆனால் முக்கடல் பகுதியில் எதிர்பார்த்த அளவு மழை இல்லை. இதனால் சானலில் தண்ணீர் எடுப்பதும் சிரமமாக உள்ளதாக பணியாளர்கள் கூறினர்.

52 வார்டுகளிலும் திமுக சார்பில் போராட்டம்
குமரி கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கை: நாகர்கோவில் மாநகர பகுதியில் 10, 15 நாட்களுக்கு மேலாக பல தெருக்களுக்கு தண்ணீர் வரவில்லை. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஊரடங்கு வேளையில் வெளியூர்களில் இருந்தும் பலர் வந்துள்ளனர்.இதனால் பல குடும்பங்களிலும் தண்ணீர் தேவை அதிகம் உள்ளது. மாவட்டத்தில் அணைகளில் போதிய தண்ணீர் இருப்பு உள்ளது. முக்கடல் அணைக்கு குடிநீருக்காக பெருஞ்சாணி அணையில் இருந்தும் தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. ஆனால் இதை முறையாக விநியோகம் செய்ய மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.  மாநகராட்சி நிர்வாகம் தண்ணீர் விநியோகம் செய்ய தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இல்லையெனில் மாநகராட்சி மற்றும் ஆணையரை கண்டித்து நாகர்கோவில் மாநகர பகுதியில் 52 வார்டுகளிலும் ஜூன் 1ம் தேதி திமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும்.


Tags : Nagercoil , Water shortage, dam
× RELATED நாகர்கோவிலில் சுற்றி திரிந்த 13 நாய்களுக்கு கருத்தடை