×

வெள்ளத்தில் சுக்கு நூறாகி 28 ஆண்டுக்கு பின் முண்டந்துறையில் புதிய ஆற்று பாலம் திறப்பு: காணொலி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்

வி.கே.புரம்: முண்டந்துறை சேர்வலாறு ஆற்றில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதல்வர் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் நேற்று திறந்து வைத்தார். பழைய பாலம் இடிந்து 28 ஆண்டுக்கு பின் புதிய பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்துவிடப்பட்டுள்ளது. கடந்த 1992ம் ஆண்டு நவம்பர் 13ம் தேதி குமரிக்கடலில் உருவான புயல் நெல்லை வழியாக கரையை கடந்தது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் பெரும் மழை வெள்ளத்தை சந்தித்தன. நவம்பர் 13ம் தேதியன்று தாமிரபரணியின் நீராதாரமாக விளங்கும் பாபநாசம் அணைப் பகுதியில் 310 மி.மீ. மழையும், சேர்வலாறு அணைப் பகுதியில் 210 மி.மீ., பாபநாசம் கீழ்அணைப் பகுதியில் 190 மி.மீ., மணிமுத்தாறு அணையில் 260 மி.மீ. என்று வரலாறு காணாத வகையில் மழை கொட்டியிருந்தது.இதனால் பாபநாசம், சேர்வலாறு, மணிமுத்தாறு அணைகளுக்கு கட்டுக்கடங்காத காட்டுவெள்ளம் வந்தது. அணைகள் உடையும் அபாயத்தை தவிர்க்க அன்று பாபநாசம், சேர்வலாறு அணைகள் நள்ளிரவில் திறந்து விடப்பட்டன. இதனால் தாமிரபரணியில் சுமார் 2 லட்சம் கனஅடி தண்ணீர் கடும் சீற்றத்துடன் பாய்ந்தது. இதில் முண்டந்துறை வனப்பகுதியிலுள்ள சேர்வலாறு பாலம் சுக்கு நூறானது.

பாபநாசம், திருவள்ளுவர் நகரில் நவம்பர் 14-ம் தேதி அதிகாலையில் 17 பேரை வெள்ளம் பலிகொண்டது. அங்கு வீடுகளின் மொட்டை மாடிகளில் தஞ்சமடைந்தவர்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் மீட்கப்பட்டனர்.காரையாறு, சேர்வலாறு பகுதிகளை இணைக்கும் ஒரே பாலம் வெள்ளத்தில் நொறுங்கியதால் ஆற்றின் நடுவில் மின்சார வாரியத்தின் மூலம் தற்காலிக இரும்பு பாலம் போடப்பட்டது. இந்நாள் வரையிலும் இந்த தற்காலிக பாலம் வழியாகத்தான் சோ்வலாறு, காரையாறு மற்றும் சொரிமுத்தய்யனார் கோயிலுக்கு பொதுமக்கள் சென்று வந்தனர். கடந்த 2013 ஜூலை 7ம் தேதி ஒருங்கிணைந்த சாலை உள் கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின்கீழ் நிர்வாக அனுமதி பெற்று 2014ம் ஆண்டு ஜூன் 6 தேதி சுமார் 7 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சேர்வலாறில் புதிய பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. தொடர்ந்து கூடுதல் மதிப்பீட்டில் 2016 நவம்பர் மாதம் 14ம் தேதி பாலம் கட்டும் பணி தொடங்கியது.

மழை, வனத்துறை அனுமதி மறுப்பு என பல காரணங்களால் பாலம் கட்டுமானப் பணிகள் அடிக்கடி முடங்கியது. கட்டுமான பணி துவங்கி 6 ஆண்டுகளாகியும் நிறைவடையாதது குறித்து தினகரனில் பலமுறை சுட்டிக்காட்டப்பட்டது. இதையடுத்து ரூ. 9.17 கோடி மதிப்பீட்டில் பாலம் முழுமையாக கட்டி முடிக்கப்பட்டு, பாலத்தின் இரு புறமும் புதிய தார்சாலை அமைக்கப்பட்டது. ஆற்றில் அதிகளவு வெள்ளம் வந்தாலும் பாதிப்பு ஏற்படாத வகைக்கு தேவையான உயரத்துடன் பாலம் கட்டப்பட்டுள்ளது. பழைய பாலம் இடிந்து 24 ஆண்டுக்கு பின் கட்ட துவங்கி, 28வது ஆண்டில் பணிகள் நிறைவடைந்த பின்பும் பல மாதங்களாக இப்பாலம் போக்குவரத்திற்கு திறந்து விடப்படாமல் இருந்தது.

இந்நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் முண்டந்துறை பாலம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்துவிடப்பட்டது. சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் முதல்வர் எடப்பாடி பழனி சாமி பாலத்தை திறந்து வைத்தார். முண்டந்துறை பாலத்தில் நடந்த நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைதுறை கண்காணிப்பாளர் சாந்தி, கோட்ட பொறியாளர் சத்தியமூர்த்தி, உதவி கோட்ட பொறியாளர் கிறிஸ்டோபர், உதவி பொறியாளர் அல்பின் அஸ்மிதா மற்றும் சாலை ஆய்வாளர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டனர்.



Tags : opening ,floods ,bridge ,river ,Chief Minister ,Mundandurai ,New River Bridge , New river bridge, Mundandurai , 28 years
× RELATED அரியலூரில் திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு விழா