×

காவேரிப்பாக்கத்தில் கதறும் மக்கள் வாழ்விழந்து தவிக்கும் 150 வாழை விவசாயிகள்: 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட வாழை வீணாப்போச்சு

காவேரிப்பாக்கம்: காவேரிப்பாக்கத்தில் வாழ்விழந்து தவிக்கும் வாழை விவசாயிகள் 2 ஆயிரம் ஏக்கரில் பயிரிட்ட வாழை வீணாகிப்போனதே என்று கதறி வருகின்றனர். வட தமிழகத்தின் 3வது பெரிய ஏரியாகவும், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மிகவும் பெரிய ஏரியாகவும் விளங்கி வருவது காவேரிப்பாக்கம் ஏரி. இந்த ஏரியின்  மொத்த பரப்பளவு 3ஆயிரத்து 968 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டுள்ளது. இந்த ஏரியானது ஒரு முறை நிரம்பி வழிந்தால் 12மாதங்கள், அதாவது 3 போகம் அறுவடை செய்யலாம் என்பது இந்த ஏரியின் சிறப்பு தன்மையாக உள்ளது..இந்த ஏரியில் இருந்து நரிமதகு, சிங்க மதகு, மூலம் மதகு,  பள்ளமதகு, கிழவன் மதகு, உள்ளிட்ட 10 மதகுகள் வாயிலாக  கால்வாய் மூலம் நேரடியாக தண்ணீர் பெறப்படுகின்றன. இதன் மூலம் காவேரிப்பாக்கம், கட்டளை,  அய்யம்பேட்டைசேரி, அத்திப்பட்டு, உள்ளிட்ட 14 கிராமங்களில் சிறிய சிறிய ஏரிகள் நிரப்பப்படுகின்றன. இதன் வாயிலாக சுமார் 6ஆயிரத்து 278 ஏக்கர் நிலப்பரப்பில்  தண்ணீர் பாய்ச்சி விவசாயம் செய்யப்படுகின்றன.மேலும் இந்த ஏரிக்கரையின் கீழ்ப்பகுதியில் காவேரிப்பாக்கம், கட்டளை,  அய்யம்பேட்டைசேரி, உள்ளிட்ட பகுதிகளில் முக்கிய பயிராக வாழையை பயிரிட்டு வருகின்றனர். இவ்வாறு பயிரிடப்படும்  வாழை மரம், வாழைக்காய், வாழை இலை, வாழைப் பூ, வாழைத் தண்டு ஆகியவற்றை அறுவடை செய்துபெங்களூர், ஒசூர், சித்தூர், வேலூர், காஞ்சிபுரம், சென்னை, உள்ளிட்ட பகுதிகளுக்கு கொண்டு சென்று விற்பனை செய்து வந்தனர். இதனால் காவேரிப்பாக்கம் பகுதியில்  வாழை பயிரிடப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நல்ல லாபமடைந்து வந்தனர்.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நிலையில், காவேரிப்பாக்கம் ஏரிக்கரையின்  கீழ்ப்பகுதியில் சுமார் 2 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 150 விவசாயிகள் வாழை பயிரிட்டனர். வாழை இலைகள் முதல், வாழை பழம், வாழைப்பூ உள்ளிட்ட எதனையும் பிற மாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்ப முடியவில்லை. முன்பெல்லாம் காற்று, மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களால் தான் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும். ஆனால் தற்போது கொரோனா காரணமாக வாழை விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக  வியாபாரிகள் விவசாயிகளை தேடி வரவில்லை. மேலும் கொரோனா ஊரடங்கினால், திருவிழா, திருமணம், காதணிவிழா, உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு அனுமதியில்லை. இதனால் விவசாயிகள் விளைவித்த பொருட்கள் வீணாகியுள்ளது.  வாழைமட்டுமின்றி கடந்த 2 மாதங்களாக விவசாய நிலங்களில் விளைந்த வாழைக்காய், வாழை இலை, சொரக்காய், பாவக்காய், தர்பூசணி, முல்லைப்பூ, உள்ளிட்டவை விற்பனை செய்ய முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே  தமிழக அரசு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க உதவித்தொகை வழங்கி, இந்த பாதிப்பில் இருந்து விவசாயிகளை மீட்க வழிவகை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Tags : Kaveripakkam , 150 Banana farmers, Kaveripakkam,Banana waste, 2 thousand acres
× RELATED காவேரிப்பாக்கம் அருகே கோடை வெயில்...