×

கொரோனா ஊரடங்கால் ஈரோட்டில் ரூ.25 கோடி லுங்கிகள் தேக்கம்

* வர்த்தக இழப்பால் வியாபாரிகள் கவலை

ஈரோடு:   கொரோனா வைரஸ் ஊரடங்கால் ஈரோட்டில் குடோன்களில் ரூ.25 கோடி மதிப்பீட்டில் லுங்கிகள் தேக்கமடைந்துள்ளன. வியாபாரம் இன்றி வியாபாரிகள் கவலையடைந்துள்ளனர்.   ஜவுளி உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈரோடு மாவட்டம் முன்னணி மாவட்டமாக இருந்து வருகிறது. ஈரோடு மாநகர பகுதிகளில் பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, ஆர்.கே.வி.ரோடு, கிருஷ்ணா தியேட்டர் ரோடு, ஈஸ்வரன் கோவில் வீதி, திருவேங்கடசாமி வீதி, என்.எம்.எஸ்.காம்பவுண்ட் உள்ளிட்ட பகுதிகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஜவுளி வர்த்தக நிறுவனங்கள் உள்ளது. இதில் லுங்கி, வேட்டி, காடா துணிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக லுங்கி ரகங்கள் அனைத்தும் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம், குமாரபாளையம் பகுதிகளில் உள்ள விசைத்தறிகள் மூலமாக உற்பத்தி செய்யப்படுகிறது. ஈரோடு பகுதிகளில் உள்ள லுங்கி நிறுவனங்கள் மூலமாக கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களுக்கு அதிக அளவில் லுங்கி விற்பனை செய்யப்படுகிறது. இந்த மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள் ஈரோட்டில் உள்ள மொத்த லுங்கி வியாபாரிகளிடம் லுங்கி உள்ளிட்ட ரகங்களை வாங்கி வருகின்றனர்.

வாரந்தோறும் ரூ.3 கோடி அளவிற்கு லுங்கி விற்பனை இருந்து வந்தது. தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 3 மாதமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இதனால் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.
 இதில் குறிப்பாக ரம்ஜான் பண்டிகைக்காக வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் லுங்கிகள் ஆர்டர் கொடுத்து வாங்கி செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு ரம்ஜான் விற்பனையும் வெகுவாக குறைந்துள்ளது. ஒரு லட்சம் லுங்கிகள் ஆர்டர் கொடுக்கும் நிலை மாறி தற்போது ஆயிரம் லுங்கிகள் கூட ஆர்டர் கிடைக்காத நிலை இருந்து வருகிறது. இதனால் ஈரோடு பகுதிகளில் உள்ள லுங்கி குடோன்களில் ரூ.25 கோடி அளவிற்கு லுங்கிகள் விற்பனையாகாமல் தேக்கமடைந்துள்ளன. போதிய வியாபாரம் இல்லாத நிலையில் ஏற்கனவே கொடுக்கப்பட்ட ஆர்டர்களையும் கேன்சல் செய்து விட்டனர். இதனால் லுங்கி வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து ஈரோடு கிளாத் மெர்ச்சண்ட்ஸ் அசோசியேசன் உறுப்பினரும், லுங்கி வியாபாரியுமான நமச்சிவாயம் கூறியதாவது: ஈரோட்டில் எங்கள் சங்கத்தில் பதிவு செய்து ஆயிரத்து 500 வியாபாரிகளும், பதிவு செய்யாமல் ஆயிரத்து 500 வியாபாரிகளும் என 3 ஆயிரம் வியாபாரிகள் உள்ளனர். இதில் பெரும்பாலான ஜவுளி கடைகளில் லுங்கி ரகங்கள் விற்பனை செய்யப்படுகிறது. ஒவ்வொரு வியாபாரியும் வங்கிகளில் கடன் பெற்றுதான் இந்த தொழிலை நடத்தி வருகிறோம்.
 தற்போது கொரோனா ஊரடங்கால் லுங்கி விற்பனை முடங்கியுள்ளது. கடைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்கு ஊதியம் கொடுக்க வேண்டிய நிலையும் உள்ளது. ஏற்கனவே வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்பட்ட லுங்கிகளுக்கு வழக்கமாக 45 நாள் முதல் 60 நாட்களுக்குள் பணம் வந்து விடும். தற்போது 180 நாட்கள் ஆனநிலையிலும் பணம் வரவில்லை. பணத்தை கேட்டால் அங்குள்ள வியாபாரிகளும் கொரோனா ஊரடங்கை காரணம் காட்டுகின்றனர்.

இதனால் பணம் எப்போது வரும் என்று தெரியாத நிலை இருந்து வருகிறது. வங்கிகளில் பெற்ற கடனுக்கு 3 மாதம் தவணை தொகை வசூலிக்க கூடாது என அரசு கூறியுள்ளது. ஆனால் கடன் கட்டுவதற்கான தவணை காலம் மேலும் 3 மாதம் அதிகரிக்கும். இதில் 3 மாத தவணை தொகைக்கான வட்டியும் செலுத்த வேண்டி இருக்கும். கொரோனா ஊரடங்கால் வியாபாரிகளுக்கு ஏதாவது திட்டங்களை அறிவிப்பார்கள் என எதிர்நோக்கியிருந்தோம். ஆனால் எந்த திட்டமும் இல்லை. ஒருபுறம் கடன் பிரச்னையும், மற்றொருபுறம் வாடகை பிரச்னையும் நிலவுகிறது. இதை எப்படி சமாளிப்பது? எனத் தெரியாமல் தவித்து வருகிறோம். மத்திய, மாநில அரசுகள் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஜவுளி தொழில் இயல்பு நிலைக்கு வரும் வரை வாங்கிய கடனுக்கான வட்டியை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும் அனைத்து ஜவுளி வியாபாரிகளுக்கும் பாகுபடியின்றி மானியத்துடன் கடனுதவி வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Tags : Coronation,currencies, Erode
× RELATED சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள...