×

விற்பனை இல்லாததால் அழுகி வீணாகும் சாம்பார் பூசணிக்காய்கள் : விவசாயிகள் வேதனை

நெல்லை: ஓட்டல்கள் வழக்கத்தைப்போல இயங்காததாலும், சுபநிகழ்ச்சிகள் பெரியளவில் நடக்காததாலும் சாம்பார் பூசணிக்காய்கள் விற்பனையின்றி அழுகி வீணாகுவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர். ஆலங்குளம், பாவூர்சத்திரம், ஆழ்வார்குறிச்சி, கடையம், அம்பை, மானூர், இட்டேரி, மூலைக்கரைப்பட்டி, முனைஞ்சிப்பட்டி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை, புடலை, தடியங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர். கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ததால் கிணறு, போர்வெல்களில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காய்கறி பயிர்கள் செழித்து வளர்ந்தன. கத்தரி, தக்காளி, புடலை, சாம்பார் பூசணிக்காய்கள் உள்ளிட்டவை விளைச்சல் அமோகமாக இருந்தது. இந்நிலையில்  கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. ஓட்டல்கள், உணவு விடுதிகள் உள்ளிட்ட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. திருமணம், கோயில் திருவிழாக்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டுமே குறிப்பிட்ட நேரத்தில் திறக்கப்பட்டன.

இதன் காரணமாக காய்கறி விற்பனை முடங்கியது. நெல்லை மார்க்கெட்டுகளில் தக்காளி, நெல்லிக்காய், கத்தரிக்காய் உள்ளிட்டவை அழுகி வீணாகி கால்நடைகளுக்கு தீவனமானது. தற்போது 4ம் கட்ட ஊரடங்கு நீட்டிப்பில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இருப்பினும் ஓட்டல்கள், உணவகங்கள் முழுமையான அளவில் செயல்படவில்லை. அதேபோல் திருமணங்கள் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே நபர்கள் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக சாம்பாருக்கு பயன்படும் பூசணிக்காய்கள் விற்பனையின்றி அழுகி வீணாகின்றன. நன்கு விளைந்த பூசணிக்காய்கள் பறித்து வயல்வெளிகளில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இதனை வாங்க வியாபாரிகள் யாரும் முன்வராததால் வீணாகி வருகிறது. இதனால் செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலையில் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

இதுகுறித்து இட்டேரி  ஆலங்குளத்தை சேர்ந்த விவசாயி முத்து கூறுகையில், இந்த ஆண்டு கத்தரி, தக்காளி, பூசணிக்காய் நல்ல விளைச்சல் காணப்பட்டது. ஊரடங்கு உத்தரவால்  ஓட்டல்கள்,  உணவகங்களில் பயன்படுத்தும் பூசணிக்காய்கள் விற்பனை முடங்கியது. இதனால் செடிகளில் பறிக்கப்பட்ட பூசணிக்காய்கள் விற்பனையின்றி அழுகியும், வெயிலில் வெடித்தும் வீணாகிறது. விவசாய பணிகளுக்கு செலவு செய்த காசை கூட எடுக்க முடியாத நிலை உள்ளது, என்றார்.

Tags : Sambar pumpkins ,because,lack , sales,Farmers agony
× RELATED விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை ராமதாஸ் வலியுறுத்தல்