×

108 ஆம்புலன்ஸ் நிறுத்த இடம் வேண்டும் : பொதுமக்கள் கோரிக்கை

திருப்பரங்குன்றம்:  திருப்பரங்குன்றம் பகுதியில் 108 ஆம்புலன்ஸ் நிறுத்த நிரந்தரமாக இடம் ஒதுக்கி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பரங்குன்றம், திருநகர், ஹார்விபட்டி மற்றும் இதனைச் சுற்றியுள்ள கிராம பகுதியில் உள்ள பொதுமக்களின் அவசர சிகிச்சை மற்றும் விபத்தில் சிக்குவோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வாகனம் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனை வளாகத்தினுள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால் இப்பகுதியில் அவசர சிகிச்சை தேவைக்கு உடனடியாக 108 வாகனம் சென்று சிகிச்சை தேவைப்படுவோரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்கிறது. இந்நிலையில் திருப்பரங்குன்றம் அரசு மருத்துவமனையில் பொதுமக்கள் பயன்பாடு அதிகமானதால் 108 வாகனம் நிறுத்த இடம் இல்லாததால் தற்போது திருப்பரங்குன்றம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த 108 ஆம்புலன்ஸ் வாகனம் வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது.

இதனால் இப்பகுதியில உள்ள மக்களுக்கு அவசர சிகிச்சை தேவைப்பட்டால் நகர் பகுதியான காளவாசல் அல்லது அச்சம்பத்து ஆகிய இடங்களில் இருந்து 108 ஆம்புலன்ஸ் வாகனம் வருவதால் காலதாமதம் ஏற்படுகிறது.  இதனால் விபத்து உள்ளிட்ட அவசர சிகிச்சை தேவைப்படுவோர் கடும் அவதிக்கு ஆளாவதோடு சில நேரங்களில் முதலுதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதால் ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பு விபத்தில் சிக்குவோர் இறக்க நேரிடுகிறது.
இதுகுறித்து இப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என கூறுகின்றனர்.

மேலும் திருப்பரங்குன்றம் பகுதியில் அரசுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் யூனியன் அலுவலகம், தாலுகா அலுவலகம், சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு சொந்தமான பல்வேறு இடங்கள் உள்ளன இவற்றில் ஏதாவது ஒரு இடத்தை ஒதுக்கி திருப்பரங்குன்றம் பகுதியில் இருந்து நிரந்தரமாக 108 ஆம்புலன்ஸ் வாகனம் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர்.


Tags : 108 Ambulance,needs space, Public demand
× RELATED திருத்தணி கோயிலில் 22 நாட்களில்...