×

மாநிலங்களின் மின் பிரச்னையை தீர்க்க தனித்தனி தீர்வுகள் தேவை: பிரதமர் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி: ‘மின் விநியோகத்தில் உள்ள பிரச்னைகள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகிறது. எனவே, அவற்றை தீர்க்க தனித்தனியான தீர்வுகள் காணப்பட வேண்டும்,’ என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார். மின்துறை அமைச்சகம் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகங்களின் பணிகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் மின்துறையை பாதிக்கும் பிரச்னைகள், மாற்றியமைக்கப்பட்ட கட்டண கொள்கை, மின்சார (திருத்தம்) மசோதா 2020 உள்ளிட்ட கொள்கை நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: மின்துறையின் செயல்பாட்டு திறனை அதிகரிப்பது மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துகையில், நுகர்வோரின் திருப்தியையும் மேம்படுத்த வேண்டியது அவசியம் என்பதை பிரதமர் மோடி வலியுறுத்தினார். மாநிலங்கள் மற்றும் பல பகுதிகளில் மின்துறையில் உள்ள பிரச்னைகள், குறிப்பாக மின்விநியோகப் பிரிவில் உள்ள பிரச்னைகளை சுட்டிக் காட்டிய அவர், எல்லா பிரச்னைகளுக்கும் ஒரே தீர்வு காணாமல், ஒவ்வொரு மாநிலத்தின் செயல்பாட்டை மேம்படுத்த, அந்தந்த மாநிலம் தொடர்பான பிரச்னைகளுக்கு மின்துறை அமைச்சகம் தீர்வு காண வேண்டும் என்றும் கூறினார்.

டிஸ்காம் நிறுவனங்கள் தங்களது செயல்திறன் அலகுகளை, ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் வெளியிடுவதை மின்துறை அமைச்சகம் உறுதி செய்ய வேண்டும் என்றும், அப்போதுதான் டிஸ்காம் நிறுவனங்களின் கட்டணங்களை, மக்கள் பிறவற்றுடன் ஒப்பிட்டு அறிய முடியும் என்றும் பிரதமர் அறிவுறுத்தினார். மின்துறையில் பயன்படுத்தப்படும் சாதனங்கள் இந்தியாவில் தயாரித்தவையாக இருக்க வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொடர்பாக, பிரதமர் கூறுகையில், வேளாண் துறைக்கு உதவும் சூரிய மின்சக்தியை, குடிநீர் குழாய்கள் முதல் குளிர்பதன கிடங்குகள் வரை அனைத்து விநியோக சங்கிலியிலும் முழுமையாகப் பயன்படுத்தும் வகையிலான ஒருங்கிணைந்த அணுகுமுறையின் அவசியத்தை வலியுறுத்தினார்.

 ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு நகரம் (தலைநகரோ அல்லது பிரபல சுற்றுலா தலமோ) முழு சூரிய மின்சக்தி நகரமாக இருக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். லடாக்கில் கரிம சமநிலை உருவாக்கும் திட்டத்தை துரிதப்படுத்துவது பற்றி விருப்பம் தெரிவித்த பிரதமர்,  சூரிய மின்சக்தி மற்றும் காற்று மின்சக்தி மூலம் கடலோரப் பகுதிகளில் குடிநீர் சப்ளையை ஏற்படுத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



Tags : Modi ,States , States, Power, Solutions, Prime Minister Modi
× RELATED கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர்...