புல்வாமாவில் மீண்டும் தற்கொலை படை தாக்குதல் சதி வெடிகுண்டுகள் நிரப்பிய கார் பறிமுதல்: தீவிரவாதிகள் திட்டம் முறியடிப்பு

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த தீவிரவாதிகள் தீட்டிய திட்டத்தை பாதுகாப்பு படையினர் முறியடித்தனர். வெடிகுண்டுகள் நிரப்பிய காரை பறிமுதல் செய்த போலீசார் அதனை பாதுகாப்பாக செயலிழக்க செய்தனர். ஜம்மு காஷ்மீரின் புல்வாமாவில் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தை சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற வாகனங்கள் மீது மோத வைத்து, கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில், 40 வீரர்கள் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்துதான், பாகிஸ்தானுக்குள் இந்திய போர் விமானங்கள் நுழைந்து, தீவிரவாத முகாம்களை துவம்சம் செய்தன. தமிழகத்தை சேர்ந்த போர் விமானி அபிநந்தன் பாகிஸ்தான் பிடியில் சிக்கி, பின்னர் மீட்கப்பட்டார். புல்வாமா தாக்குதல், இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. இந்நிலையில், புல்வாமா பாணியில் தீவிரவாதிகள் நேற்றும் கார் வெடிகுண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருந்தனர். இதை பாதுகாப்பு படையினர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். புல்வாமாவில் பாதுகாப்பு படையினர், போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்த சோதனையின்போது வெள்ளை நிற கார் ஒன்று வந்தது. அதை வீரர்கள் நிறுத்த முயன்றனர். ஆனால், காரில் வந்தவர்கள் நிற்காமல் தடுப்புகளை உடைத்து கொண்டு செல்ல முயன்றனர்.

இதனால், உஷாரான பாதுகாப்பு படை வீரர்கள், உடனடியாக துப்பாக்கிச்  சூடு நடத்தினார்கள். காரில் இருந்தவர் தப்பி ஓடிவிட்ட நிலையில் கார் பறிமுதல் செய்யப்பட்டது. அதை சோதனை செய்த ேபாது பின் இருக்கையில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட பார்சல்கள் இருப்பதை கண்டு அதிர்ந்தனர்.அதில் சக்தி வாய்ந்த 20 கிலோ வெடிபொருட்கள் காரில் இருந்தது. காரை  நகர்த்தினால் வெடித்து சிதறும் அபாயம் இருந்ததால், அந்த பகுதியில் இருந்தவர்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். பின்னர், அந்த இடத்திலேயே காரில் இருந்த வெடிகுண்டுகள் வெடிக்க செய்யப்பட்டன. இதனால், காஷ்மீரில் நேற்று நடக்க இருந்த மிகப்பெரிய சதித்திட்டம் முறியடிக்கப்பட்டது. கடந்த இரண்டு மாதங்களில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் அதிகரித்துள்ளது. பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் அதிகாரிகள் உட்பட 30 பேர் தாக்குதலில் உயிரிழந்துள்ளனர். அதேபோல், 38 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் தேடப்பட்டு வந்த தீவிரவாதியும், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பின் கமாண்டருமான ரியாஸ் நாய்கோ சுட்டுக் கொல்லப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

* காரில் 20 கிலோ சக்தி வாய்ந்த வெடிகுண்டு இருந்தது.

* கடந்த 2 மாதங்களில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், பாதுகாப்பு படை வீரர்கள், அதிகாரிகள் 30 பேர் வீர மரணம் அடைந்துள்ளனர்.

* இதே காலக்கட்டத்தில் பாதுகாப்பு படையின் தாக்குதலில் 38 தீவிரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

* முதல் படத்தில் கார் வருவதும், இரண்டாவது படத்தில் கார் பறிமுதல் செய்யப்பட்டு வெடிக்க வைக்கப்படுவதையும் படத்தில் காணலாம்.

Related Stories:

>