×

5 லட்சம் ஜோடிகளின் முதலிரவு ‘கட்’: பாவத்தை கொட்டிக் கொண்ட கொரோனா

அகமதாபாத்: 3 மாதமாக கொடூரத் தாண்டவமாடி வரும் கொரோனா, 5 லட்சம் இளம்ஜோடிகளின் முதலிரவு கொண்டாட்டத்தில் மண் அள்ளி போட்டு, வயிற்றெரிச்சலை கொட்டிக் கொண்டுள்ளது. குஜராத்தில் கடந்த இரண்டு மாதங்களில் 30 ஆயிரம் திருமணங்கள் கொரோனாவால் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அந்த இளம் ஜோடிகளின் வயிற்றெரிச்சலை கொரோனா வைரஸ் கொட்டி கொண்டுள்ளது. திருமணம் என்பது ஆயிரங்காலத்து பயிர் என்பார்கள், அதனால்தான் என்னவோ, உற்றார், உறவினர், நண்பர்கள், சுற்றத்தார் புடை சூழ சீரும் சிறப்புமாக ஒரு விழா எடுப்பது போல் திருமணங்கள் கொண்டாடப்படுகிறது. ஆனால், கொரோனா இதை முழு சந்திரமுகியாக மாறி கெடுத்து விட்டது. கொரோனாவால் உலகளவில் பல்வேறு விதங்களில் பாதிப்புகள் ஏற்பட்டிருந்தாலும், திருமணங்கள் நிறுத்தப்படுவதால் இளம் ஜோடிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் வயிற்றெரிச்சல் கொரோனாவை கூட, விடாது கருப்பு போல் துரத்தும் போல் தெரிகிறது.ஆரம்பத்தில் மணமக்களின் பெற்றோர் மட்டுமே அனுமதி என்பதில் தொடங்கி, முக‍க் கவசத்துடன் 20 உறவினர்களுடன் மட்டும் திருமணங்கள் என்றெல்லாம் நடந்து வந்த நிலையில், தொற்று அதிகரித்ததைத் தொடர்ந்து தற்போது திருமணங்கள் ரத்தாகி வருகின்றன.

இதற்கிடையேயும், சில அவசர திருமண சம்பவங்கள் நிறைவேறி உள்ளன. திருமலையில் மணமகன்- மணமகள், அவர்களின் பெற்றோர் என 6 பேர் மட்டுமே பங்கேற்ற திருமணம் சில தினங்களுக்கு முன் நடந்தது. ஆனால்,  தாலி கட்டிய கையோடு மணமகளுக்கு கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு இளம் ஜோடிகள் பிரிக்கப்பட்டன. அதேபோல், உத்தர பிரதேசத்தில் திருமணம் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டதால் வெறுத்துப் போய் இளம்பெண், மணமகன் வீட்டுக்கு 80 கிமீ தூரம் நடந்தே சென்று, பிடிவாதம் பிடித்து தாலி கட்டிக் கொண்டார். இதுபோல், கொரோனா தயாரித்து வழங்கிய விதவிதமான திருமண படங்கள் ஏராளம். இந்நிலையில், பஞ்சாப் மாநிலத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் மட்டும் ஏறக்குறைய 30 ஆயிரம் திருமணங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக பஞ்சாப் ஓட்டல்கள் மற்றும் விடுதிகள் சங்க செய்தி தொடர்பாளர் அபிஜித் தேஷ்முக் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ``மார்ச், ஏப்ரல் மாதங்களில் தான் இங்கு அதிகளவில் முகூர்த்தங்கள் இருந்தன. பெரியளவில் திருமணங்களை நடத்தும் சிலர் கூட எட்டு அல்லது பத்து உறவினர்களுடன் திருமணங்களை முடித்து கொண்டனர். கடந்த 18ம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டாலும், ஓட்டல்கள், விடுதிகள், பார்ட்டி நடக்கும் இடங்கள், கோயில்கள் ஆகியவற்றை திறக்க அனுமதி வழங்கப்படவில்லை. இதனால் புக்கிங் செய்யப்பட்டிருந்த திருமணங்கள் ரத்து செய்யப்பட்டு, டிசம்பர், ஜனவரி மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன,’’ என்றார். தமிழகத்தில் கூட கடந்த 3 மாதங்களில் ஒன்றரை லட்சம் திருமணங்களுக்கு மேல் நின்று விட்டதாக சமீபத்தில் தகவல் வெளியானது. இதுபோல், நாடு முழுவதும் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை நிறுத்தியுள்ள கொரோனா, இளம் ஜோடிகளின் எண்ணற்ற கனவுகள், கற்பனைகளில் அணுகுண்டை போட்டு சிதறடித்துள்ளது.

Tags : couples ,building ,Corona , 5 Lakhs Couples, irst night Cut, Corona
× RELATED காதல் ஜோடிகள் போலீசில் தஞ்சம்