×

புதிய குடும்ப அட்டை வழங்கப்படாத 71 ஆயிரம் பேருக்கும் இலவச ரேஷன் பொருள்: அமைச்சர் அறிவிப்பு

சென்னை: புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து, அச்சிட்டு வழங்கப்படாமல் உள்ள 71 ஆயிரம் பேருக்கும் ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று அமைச்சர் காமராஜ் கூறினார். இதுகுறித்து உணவு துறை அமைச்சர் காமராஜ் சென்னையில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு, தமிழகத்தில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏப்ரல் முதல் ஜூன் முடிய 3 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள் வழங்கப்பட்டுள்ளது.  இதனால் வழக்கமாக வழங்கப்படும் உணவு மானியத்தை காட்டிலும் கூடுதலாக 3,108.33 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அக்டோபர் 2019 முதல் ஏப்ரல் 2020 முடிய உள்ள காலத்தில் புதிய குடும்ப அட்டைகளுக்காக விண்ணப்பித்தவர்களில் அங்கீகரிக்கப்பட்டு, இதுவரை குடும்ப அட்டை அச்சிட்டு வழங்கப்பெறாமல் உள்ள 71,067 குடும்பங்களுக்கும் சம்பந்தப்பட்ட நியாய விலை கடைகளில் அத்தியாவசிய பொருட்களை இலவசமாக பெற்றுக் கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. அமைப்புசாரா  தொழிலாளர்கள் 22,76,936 பேருக்கு தலா 15 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு மற்றும் 1 லிட்டர் சமையல்எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் மற்றும் குடும்ப அட்டை இல்லாத 4,022 திருநங்கைகளுக்கு 12 கிலோ அரிசி, ஒருகிலோ பருப்பு மற்றும் ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் ஆகியவை அடங்கிய தொகுப்பும் வழங்கப்பட்டது. இதற்காக மொத்தம் ₹144 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு  கூறினார்.


Tags : Minister ,announcement , New Family Card, Free Ration Item, Minister
× RELATED தேர்தல் ஆணையம் நடவடிக்கை...