×

கொரோனா தடுப்பு பணிக்கு பயிற்சி சுகாதார ஆய்வாளராக மாணவர்களை நியமிப்பதா? மாநகராட்சி முடிவுக்கு அதிகாரிகள் கொந்தளிப்பு

ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க முடியும்.

சென்னை: சென்னை மாநகராட்சியில் மொத்தம் 200 வார்டுகள் உள்ளன. வார்டு ஒன்றுக்கு ஒரு சுகாதார ஆய்வாளர் வீதம் மொத்தம் 200 பேர் மற்றும் பிறப்பு, இறப்பு மற்றும் சுகாதார பணிகளை மேற்கொள்ள 32 பேர் என 232 சுகாதார ஆய்வாளர்கள் பணியில் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய நிலவரப்படி 110  சுகாதார ஆய்வாளர்கள் மட்டுமே பணியில் உள்ளனர். இதனால் ஒரு சுகாதார ஆய்வாளர் 2 முதல் 3  வார்டுகளை கவனித்து வருகின்றனர். கொரோனாவுக்கு முன்பு வரை இவர்களுக்கு பிரச்னை இல்லை. இப்போது சென்னையில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துள்ளதால் இரவு, பகல் பார்க்காமல் சுகாதார பணியாளர்கள் வேலை செய்யும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

கொரோனா தடுப்பு பணி மேற்கொள்ள புதிதாக சுகாதார ஆய்வாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று சென்னை மாநகராட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் அறிவிப்பு வெளியிட்டு ஒரு மாதம் ஆகியும் தற்போது வரை புதிதாக யாரும் நியமிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழக அரசின் உத்தரவின்பேரில், மாணவர்களை பயிற்சி சுகாதார ஆய்வாளர்களாக நியமித்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. இதனால் மேலும் பணிச்சுமை அதிகரித்து உள்ளதாக மாநகராட்சி ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மாநகரட்சி ஊழியர்கள் கூறியதாவது:  கொரோனா தடுப்பு பணியில் சுகாதார ஆய்வாளர்களின் பணி மிகவும் முக்கியமானது. தினசரி பாதிக்கப்படுவர்களை மருத்துவமனைக்கு அனுப்புவது, அவர்களின் தொடர்புகளை கண்டறிந்து சோதனை செய்வது உள்ளிட்ட பல்வேறு பணிகளை சுகாதார ஆய்வாளர்கள் செய்து வருகின்றனர். கொரோனா காரணமாக சுகாதார ஆய்வாளர்களுக்கு அதிக பணிச்சுமை ஏற்ப்பட்டுள்ளது.

அதிக பாதிப்பு உள்ள மண்டலங்களில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர்கள் தினசரி 10க்கும் மேற்பட்ட நபர்களின் தொடர்புகளை கண்டறிய வேண்டியுள்ளது. இதைத் தவிரத்து அறிக்கை அளிப்பது, கட்டுப்பாட்டு பகுதிகளை கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை செய்ய வேண்டியுள்ளது.  பணிச்சுமையை குறைக்க சுகாதார ஆய்வாளர்கள் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று கோரிக்கை வைத்தோம். ஆனால் தகுதிவாய்ந்த பணியாளர்களை நியமிக்காமல் மாணவர்களை பயிற்சி சுகாதார ஆய்வாளர்களாக நியமித்து உள்ளனர். இந்த பேரிடர் காலத்தில் ஏற்கனவே பணிச்சுமை அதிகமாக உள்ள நிலையில் இந்த மாணவர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க முடியும். எனவே நிரந்தர சுகாதார ஆய்வாளர்களை நியமித்தால் மட்டும் கொரோனா தடுப்பு பணியில் முழுமையாக பணியாற்ற முடியும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



Tags : training health inspector ,Corona Prevention , Corona, Health Analyst, Students, Madras Corporation
× RELATED கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில்...