×

கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பு: சென்னையில் ஒரே நாளில் 15 பேர் பலி: ஒரு வாரத்தில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் 15 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர்.  கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் மட்டும் 40க்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்துள்ளனர். இது பொதுமக்களிடையே பரபரப்பையும், பீதியையும் ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா வைரஸ் தாக்கம் சென்னை வெயிலையும் தாங்கி மக்களிடம் வேகமாக பரவி வருகிறது. இதனால் மருத்துவமனை, கோரன்டைன் வார்டுகள் நிரம்பி வழிகிறது. கொரோனா பாதிப்பு குறைவாக இருந்தபோது அளிக்கப்பட்ட சிகிச்சை மற்றும் உணவுகள் இப்போது அளிக்கப்படுவது இல்லை என்று நோயாளிகள் தரப்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதனால் தினசரி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது.

இந்நிலையில் நேற்று மட்டும் சென்னையில் மட்டும் 15 பேர் கொரோனாவால் மரணம் அடைந்துள்ளனர். ஸ்டான்லி மருத்துவமனையில் கே.கே.நகரைச் சேர்ந்த 38 வயது ஆண், புளியந்தோப்பு கன்னிகாபுரத்தைச் சேர்ந்த 88 வயது முதியவர், திருவொற்றியூரைச் சேர்ந்த 51 வயது ஆண், செங்குன்றத்தைச் சேர்ந்த 50 வயது ஆண் உட்பட 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் மரணம் அடைந்துள்ளனர். ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொண்டித் தோப்பைச் சேர்ந்த 70 வயது முதியவர், கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொத்தவால்சாவடியைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி, அமைந்தகரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செம்பியத்தைச் சேர்ந்த 62 வயது முதியவர், ஆயிரம் விளக்கில் உள்ள தனியார் மருத்துவமனையில் 58 வயது ஆண் உள்ளிட்ட 4 பேர் மரணம் அடைந்துள்ளனர்.

இதைப்போன்று ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் 78 வயது ஆண் மரணம் அடைந்துள்ளனர்.  ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 36 வயது ஆண், 65 வயது ஆண், 60 வது பெண், 64 வயது ஆண், 68 வயது ஆண், 75 வயது ஆண் உள்ளிட்ட 5 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதன்படி சென்னையில் மட்டும் நேற்று 15 பேர் மரணம் அடைந்துள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் சென்னையில் மட்டும் 40 பேர் மரணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு மரணம் அடைபவர்களில் 80 சதவீதம் பேர் 60 வயதுக்கும் மேற்பட்ட முதியவர்கள். எனவே சென்னையில் உள்ள 2 லட்சம் முதியவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முறையான சோதனை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதில் சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் பாதிப்புடன் உள்ள முதியவர்கள் மற்றும் தனியாக வசிக்கும் முதியவர்கள் கண்டறிந்து கொரனோ சிறப்பு வார்டுகள் வைத்து கண்காணிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். சென்னையில் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் அதிகரித்து வருவது பொதுமக்களிடையே பீதியையும், பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Tags : Chennai ,deaths , Coronavirus, Madras, Death, Curfew
× RELATED ரஷ்யாவில் கொரோனா தொற்று மீண்டும்...