மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் ஒரே பாலின ஜோடிக்கு திருமணம்: கொரோனா பீதிக்கு மத்தியில் டிவியில் ஒளிபரப்பு

வாஷிங்டன்: மத்திய அமெரிக்காவின் கோஸ்டாரிகாவில் முதன்முறையாக ஒரே பாலின ஜோடிக்கு திருமணம் நடந்தது. கொரோனா பீதிக்கு மத்தியில் டிவியில் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. சில மதக் குழுக்களின் கடுமையான எதிர்ப்பையும் மீறி, ஈக்வடார்,  அர்ஜென்டினா மற்றும் பிரேசில் உள்ளிட்ட பல தென் அமெரிக்க நாடுகளில் ஓரினச்  சேர்க்கை திருமணம் ஏற்கனவே சட்டப்பூர்வமானது. முக்கியமாக மத்திய அமெரிக்காவின் கத்தோலிக்க  கோஸ்டாரிகா நாட்டிலும் தற்போது இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக ஒரே பாலின திருமணத்திற்கு தடை விதித்து ஆகஸ்ட் 2018ல் அந்நாட்டின் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.

தற்போது ஓரின சேர்க்கை திருமணத்தை அனுமதித்து சட்டமாக்கப்பட்டதால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு தானாக  ரத்து செய்யப்பட்டுவிட்டது. இந்நிலையில், கோஸ்டாரிகாவில் முதல் ஒரே பாலின திருமணம் நேற்று நடந்தது. ஒரே பாலினத்தை சேர்ந்த டரிட்ஸா அராயா மற்றும் அலெக்ஸாண்ட்ரா குய்ரோஸ் ஆகிய இரு பெண்களும் சட்டப்படி திருமணத்தை பதிவு செய்து கொண்டனர். கொரோனா வைரஸ் பாதிப்பால் அமெரிக்காவில் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளுடன் திருமணம் நடந்தது.

இருப்பினும் ஆன்லைனில் அல்லது அரசு தொலைக்காட்சியில் கூட திருமண நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட்டன. கிட்டத்தட்ட 20,000 பேர் பேஸ்புக்கில் நேரடியாக இந்த திருமணத்தை பார்த்தார்கள். ஓரின திருமணத்தை ஆதரித்து போராடிய மார்கோ காஸ்டிலோ என்பவரும், ஆன்லைனில் இந்த திருமணத்தை பார்த்தார்.

Related Stories: