×

நெல்லையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை மாநில அரசு வெளியிடும் பட்டியலில் குழப்பம்: மும்பையில் இருந்து திரும்புபவர்களால் தொற்று அதிகரிப்பு

நெல்லை: வெளிமாநிலங்களில் இருந்து திரும்பி வருபவர்களால் நெல்லை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் மாநில அரசு அறிவிக்கும் பட்டியலில் கடந்த 2 நாட்களாக குழப்ப நிலை நீடிக்கிறது. நெல்லை மாவட்டத்தில் கடந்த மார்ச் 3வது வார இறுதியில் இருந்து கொரோனா தொற்று பரவி வருகிறது. ஏப்ரல் இறுதி வரை நெல்லை மாவட்டத்தில் 62 பேருக்கு மட்டுமே நோய் தொற்று இருந்தது. பின்னர் சுமார் 10 நாட்களில் புதிதாக யாருக்கும் தொற்று பாதிப் பில்லாமல் இருந்தது. மே 5ம்தேதிக்கு பிறகு வெளி மாவட்டம் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சொந்த ஊர் திரும்புவர்களுக்கு நிபந்தனையுடன் அரசு அனுமதி வழங்கியது.

இவர்களுக்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக மே 5ம்தேதிக்கு பின்னர் மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து நெல்லை  உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த தமிழர்கள் சாரை சாரையாக ரயில்களில் வந்த வண்ணம் உள்ளனர். நாள் தவறாமல் சொந்த ஊருக்கு வந்து குவிந்த வண்ணம் உள்ளனர். குறிப்பாக கொரோனா தொற்று அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சொந்த ஊர் திரும்புவோர்களில் பலருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்படுவதால் நெல்லை மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கடந்த மே 5ம்தேதி 62ல் இருந்து இன்றுவரை 300ஐ கடந்துவிட்டது.

கடந்த 23 நாட்களில் 5 மடங்கு உயர்ந்துள்ளது. மாநில அரசின் பட்டியலின்படி (நேற்று) நெல்லை மாவட்ட அளவில் தொற்று பாதித்தோர் எண்ணிக்கை 301 ஆகும். அதே நேரத்தில் கடந்த 3 நாட்களாக நெல்லை மாவட்டம் மற்றும் மாநகர பகுதியில் தொற்று பாதித்து மருத்துவமனையில் சேர்க்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. குறிப்பாக நேற்று வெளியான பட்டியலில் மகாராஷ்டிராவில் இருந்து திரும்பிய 4 பேருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால்  பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் ேசர்க்கப்பட்டோர் எண்ணிக்கை அதைவிட அதிகமாக இருந்தது.

கடந்த 3 நாட்களாகவே மாநில அரசு அறிவிக்கும் பட்டியல் மற்றும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் வித்தியாச நிலை நீடிக்கிறது. இதனிடையே இன்று மேலும் சிலருக்கு தொற்று அறிகுறி தென்பட்டுள்ளதால் அவர்கள் குறித்த அறிவிப்பு இன்று மாலை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. மும்பையில் இருந்து  சிறப்பு ரயில்கள் மூலம் நேற்றும் இன்றும் ஏராளமானோர் வந்துள்ளதால் அவர்களுக்கும் பாதிப்பு உள்ளதா? என்பது குறித்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

Tags : State Coroner ,coronavirus deaths ,State ,Paddy ,Maharashtra , Paddy, Corona, mess, Mumbai
× RELATED சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிஐ...