×

சென்னையில் நாளுக்கு நாள் தீவிரமடையும் கொரோனா: கட்டுப்பாட்டுப் பகுதிகள் தளர்வு செய்யப்பட்டு வருவதால் வேகமாக பரவுகிறதா?

சென்னை: சென்னையில் கட்டுப்பாட்டுப் பகுதிகள் தளர்வு செய்யப்பட்டு வருவதால் கொரோனா வேகமாக பரவுகிறதா என கேள்வி எழுந்துள்ளது. சென்னையில் வரலாறு காணாத அளவில் கொரோனா வைரஸ் தாக்குதல் அதிகரித்து வருகிறது. தினமும் 500 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக ராயபுரம், தேனாம்பேட்டை மண்டலங்களில் பாதிப்பு அதிகரித்து வருகிறது. சென்னையில் வைரஸ் கட்டுப்படுத்த முடியாததால், வருவாய் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தலைமையில் 15 மண்டலங்களில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஆனாலும் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை சென்னையில் அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்நிலையில் சென்னையில் கொரோனா அதிகம் பாதித்துள்ள 8 மண்டலங்களில் அதனை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள், சுகாதார பணியாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்கிடையில் கட்டுப்பாட்டு பகுதிகள் தளர்வு செய்யப்படுகிறது. இதனால் மக்கள் சாதாரணமாக எல்லா இடங்களுக்கும் சென்று வருகிறார்கள். இதன் காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரிக்கிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுவரையில் 795 கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. 14 நாட்கள் வரை அந்த பகுதியில் எந்த பாதிப்பும் இல்லாததால் கட்டுப்பாட்டு பகுதிகள் விடுவிக்கப்பட்டுள்ளது. தற்போது 356 கட்டுப்பாட்டுப் பகுதிகள் மட்டுமே சென்னையில் உள்ளன. ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 98 கட்டுப்பாட்டு பகுதிகள் உள்ளன.

திரு.வி.க.நகர் பகுதியில் 53 கட்டுப்பாட்டுப் பகுதிகளும், மாதவரம் மண்டலத்தில் 50 கட்டுப்பாட்டுப் பகுதிகளும் உள்ளன. அம்பத்தூர் மண்டலத்தில் 30 கட்டுப்பாட்டுப் பகுதிகளும் தற்போது அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் 65 கட்டுப்பாட்டுப் பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன. கட்டுப்பாட்டுப் பகுதிகள் தளர்வு செய்யப்பட்டு இருப்பதால் கொரோனா வேகமாக பரவுகிறதோ என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கிடையே சென்னையில் 2 லட்சம் பேர் வரை கொரோனா வைரசால் பாதிக்கப்படுவார்கள் என மருத்துவ குழு தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai ,Corona , Chennai, Corona, control areas relaxation
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...