×

கொரோனா பரவலை கட்டுக்குள் கொண்டு வர, சென்னையில் பரிசோதனையை 3 மடங்கு அதிகரிக்க வேண்டும் : தமிழக அரசுக்கு ஐ.சி.எம்.ஆர்.வலியுறுத்தல்!!

சென்னை : சென்னையில் கொரோனா பரிசோதனையை 3 மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஐ.சி.எம்.ஆர்.வலியுறுத்தியுள்ளது. தற்போது 3,500 ஆக உள்ள பரிசோதனையை 10,000 ஆக உயர்த்துவதன் மூலம் தொற்றை முன்கூட்டியே கண்டறிந்து பரவலை தடுக்க முடியும். இதற்காக தனியார் ஆய்வகங்களில் வசூலிக்கப்படும் ரூ.4,500 கட்டணத்தை குறைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.  சென்னையில் நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது சென்னையில் 12,000 ஆக இருக்கும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஜூன் மாத இறுதிக்குள் 2 லட்சத்தை தாண்டுவதோடு, உயிரிழப்பும் 1,400ஐ தாண்டும் அபாயம் உள்ளது.

இது குறித்து எச்சரித்துள்ள மருத்துவ வல்லுநர்கள் குழு, பரிசோதனைகளை  அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் முதல்வர் பழனிசாமியிடம் முன்வைத்துள்ளது. தமிழகத்தில் சராசரியாக நாளொன்றுக்கு 11,000 பேர் கொரோனா பரிசோதனை மேற்கொள்கின்றனர். இந்த எண்ணிக்கை போதாது,18,000 பேருக்கு சோதனை நடத்தப்பட வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் வலியுறுத்தி உள்ளது. அதிலும் குறிப்பாக சென்னையில் நாள் தோறும் 10,000 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று ஐசிஎம்ஆர் துணை இயக்குனர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் கொரோனா அறிகுறி உள்ளவர்களை முன்கூட்டியே கண்டறிந்து நோய் பரவலை தடுக்க முடியும் என்றும் அவர் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். தற்போது சென்னையில் நாள்தோறும் 3,500 முதல் 4,000 பேருக்கு கொரோனா பரிசோதனை நடைபெறுகிறது. இதனை 3 மடங்கு அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனைக்கு மாநிலம் முழுவதும் 68 ஆய்வகங்கள் உள்ளன. இவற்றில் 27 தனியார் ஆய்வகங்கள் ஆகும். தனியார் ஆய்வகங்களுக்கு அரசின் சார்பில் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கு கட்டணமாக தலா ரூ. 2,500 அரசின் சார்பில் செலுத்தப்படுகிறது.

நேரடியாக வருபவர்களுக்கு ரூ.4,500 கட்டணம் என ஐசிஎம்ஆர் கட்டணம் நிர்ணயித்துள்ளது. கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் மிக அதிகம் என்ற புகார் சென்றதை அடுத்து அதனை குறைக்க ஐசிஎம்ஆர் முன்வந்துள்ளது. இது தொடர்பாக தனியார் ஆய்வகங்களுடன் பேசி, கட்டணத்தை குறைக்க மாநில அரசுகள் முன்வர வேண்டும் எனவும் ஐசிஎம்ஆர் கேட்டுக் கொண்டுள்ளது. எனவே தனியார் ஆய்வகங்களில் பரிசோதனைக்கான கட்டணத்தை குறைப்பதன் மூலம், தாமாகவே கொரோனா பரிசோதனை செய்ய முன்வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. அதற்கான நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு. 


Tags : corona spread ,Chennai ,Government ,Corona ,Tamil Nadu ,ICMR ,Test , In order to control the corona spread, the experiment in Chennai needs to be increased three times: ICMR works
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...