×

‘சீல்’ வைக்கப்பட்ட பகுதியில் உணவு கிடைக்காமல் மக்கள் அவதி

குன்னூர்: கொரோனா பாதிப்பால் ‘சீல்’ வைக்கப்பட்ட சேலாஸ் பகுதியில் பால் உட்பட அத்யாவசிய உணவு பொருட்கள் கிடைக்காமல் மக்கள் பாதிப்படைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகேயுள்ள சேலாஸ் நேருநகர் பகுதியில் லாரி டிரைவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அந்த கிராமம் முழுவதும் கடந்த 5ம் தேதி சீல் வைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு அப்பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. இதனால் அப்பகுதியிலிருந்தவர்கள் வெளியேற முடியவில்லை. அந்த பகுதியில் உள்ள கூலி வேலை செய்வோர் பணிக்கு செல்ல முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். ஆரம்பத்தில் அரசு மற்றும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் இப்பகுதியினருக்கு நிவாரண பொருட்கள் வழங்கிய நிலையில் தற்போது 20 நாட்களாக எந்த பொருட்களும் கிடைப்பதில்லை என்றும், பால் உட்பட அத்தியாவசிய உணவு பொருட்கள் வாங்க பணம் இல்லாமல் சிரமத்துக்கு உள்ளாவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

 இதனிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் சீல் வைத்த பகுதியை இன்று வரை விடுவிக்காததால் பல்வேறு பணிகளுக்கு செல்ல முடியாமல் கூலி தொழிலாளர்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ள சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட சிலர்  புகார் தெரிவிக்க சீல் வைக்கப்பட்ட பகுதியை நேற்று முற்றுகையிட்டனர். அவர்கள் கூறுகையில், வேலை இன்றி, உணவு பொருட்கள் கிடைக்காமல் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் 200 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வேண்டும், என்றனர்.


Tags : area , People, suffering, lack,food , sealed area
× RELATED கர்நாடகாவில் வாகன சோதனையின்போது 1,200...