×

பொலிவிழந்து காணப்படும் எழில் கொஞ்சும் ஏலகிரி மலை

* ஊரடங்கு உத்தரவால் தங்கும் விடுதிகள் வெறிச்சோடியது
* 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலையின்றி தவிப்பு


திருப்பத்தூர்:  ஊரடங்கு உத்தரவால் எழில்கொஞ்சும் ஏலகிரிமலை பொலிவிழந்து காணப்படுகிறது. இதனால் 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பின்றி தவித்து வருகின்றனர். மலைகளின் இளவரசியும், ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏலகிரி மலை திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ளது. ஏலகிரி மலை  கடல் மட்டத்திலிருந்து 1700  அடி உயரத்தில் உள்ளது. 14 கொண்டை ஊசி வளைவுகளுக்கு கடைஏழு வள்ளல்களின்  பெயர்கள் சூட்டப் பட்டுள்ளது.
ஏலகிரி மலை ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் மிதமான சீதோஷ்ண நிலை இருக்கும். மேலும், சென்னை- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் மையப்பகுதியில் உள்ளதால் பெங்களூர், சென்னை மட்டுமின்றி தமிழகத்தில் பல்வேறு பகுதியில்  இருந்து வருடத்தின் அனைத்து நாட்களிலும் ஏலகிரி மலையை ரசிக்கவும் அங்குள்ள சீதோஷ்ண நிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். மேலும் ஏலகிரி மலையில் அத்தனாவூர் படகு இல்லம், இயற்கை பூங்கா, சிறுவர் பூங்கா, நிலாவூர் படகுசவாரி. சாகச விளையாட்டு பூங்கா, பறவைகள் சரணாலயம் உள்ளிட்டவைகள் சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்து வந்தது.

 இந்த  மலையில் மட்டும் 120க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகளும் நட்சத்திர அந்தஸ்து கொண்ட ஓட்டல்களும் நீச்சல் குளம் உள்ளிட்டவைகள் அடங்கிய மூன்று நட்சத்திர அந்தஸ்து உள்ள ஓட்டல்களும் உள்ளன. வழக்கமாக இந்த கோடைக்காலத்தில் பள்ளி விடுமுறையையொட்டி நாள்தோறும் ஏலகிரி மலையின் இயற்கை எழிலை ரசிக்க ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குவிந்த வண்ணம் இருப்பார்கள். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் ஏலகிரி மலைக்கு யாரும் வருவதில்லை. மேலும் ஏலகிரியில் தங்கி வேலை செய்து வந்த வெனி மாநிலம் மற்றும் வெளி மாவட்டத்தினர் அனைவரும் அவர்களின் சொந்த ஊருக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது, ஏலகிரியில் மலைவாழ் மக்கள் மட்டும் வாழ்ந்து வருகின்றனர். இதனால் சுற்றுலாதலமான ஏலகிரிமலை பொலிவிழந்து வெறிச்சோடி கிடக்கிறது. அனைத்து தங்கும் விடுதிகளும் வெறிச்சோடி காணப்படுகிறது. இங்கு பணியாற்றிய 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர்.

மேலும் மலையில் விளையும் மா, பலா, வாழை, உள்ளிட்ட பழங்கள் அனைத்தும் விற்பனை செய்ய முடியாமல் அழுகி விடுவதுடன் கால்நடைகளுக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மலைவாழ் மக்களும் சுற்றுலா பயணிகள் யாரும் வராததால் அங்கு உள்ள அனைத்து கடைகள் மற்றும் ஓட்டல்கள் மூடிக்கிடக்கிறது. இதனால் அவர்களும் வறுமையில் வாடி வருகின்றனர். எனவே தமிழக அரசு மதுக்கடைகளை திறக்க உத்தரவிட்டது போல் சுற்றுலா தலங்களையும் சமூக இடைவெளி விட்டு நாளொன்றுக்கு குறைந்த அளவில் சுற்றுலாப் பயணிகளை மலைப்பகுதிக்கு அனுப்பி பொலிவிழந்து கிடக்கும் ஏலகிரி மலை சுற்றுலா தலத்தை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மின் கட்டணத்தை கட்ட வலியுறுத்தும் மின் வாரியம் மார்ச் மாதம் 22ம் தேதி ஊரடங்கு உத்தரவால் ஏலகிரி
மலையில் உள்ள அனைத்து விடுதிகளும் பூட்டப்பட்டது. இந்நிலையில் திருப்பத்தூர் மின்சார வாரிய அதிகாரிகள், கடந்த மாதம் எவ்வளவு மின் கட்டணம் செலுத்தி உள்ளீர்களோ அதே தொகையை இந்த மாத மின் இணைப்பு பில்லாக செலுத்த வேண்டும் என்று ஓட்டல் உரிமையாளர்களை வற்புறுத்தி வருகின்றனர். அதற்கு ஓட்டல் உரிமையாளர்கள், ‘நாங்கள் எங்கள் விடுதிகளில் கடந்த மாதம் அதிக அளவில் மின்சாரம் உபயோகித்தோம், ஆகையால் அந்த பணத்தை கட்டினோம். இப்போது ஒரு மாதகாலமாக தொழில் முடங்கி எந்த பணியும் இன்றி உள்ளோம். மின்சார தேவையும் வெகுவாக குறைந்துள்ளது. இந்த நிலையில் கடந்த மாதத் மின் கட்டண தொகையை கட்டச் சொல்வது எந்த வகையில் நியாயம்?’ எனக்கேட்டு மின்சாரத் துறை அதிகாரிகளிடம் மனுக்களை அளித்து வருகின்றனர்.



Tags : Yelagiri Hill ,hill , Yelagiri Hill ,beautiful hill
× RELATED சித்ரா பவுர்ணமியையொட்டி வெள்ளியங்கிரி மலையில் குவியும் பக்தர்கள்..!!