×

நாகூரில் இருந்து பள்ளியில் படிக்க வைப்பதாக கூறி வாங்கி வந்த பெண் குழந்தை விற்பனை: அதிகாரிகள் மீட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு

கோவில்பட்டி: பள்ளியில் படிக்க வைப்பதாக கூறி அழைத்து வந்து கோவில்பட்டியில் விற்கப்பட்ட பெண் குழந்தையை அதிகாரிகள் மீட்டனர். நாகூர் கோசா மரைக்காயர் தெருவைச் சேர்ந்தவர் அஸ்ரப் அலி. மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவரது மனைவி நிர்மலா பேகம். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. இதில் இரண்டாவது குழந்தை மும்தாஜ்பேகம்(3). இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த அசன் முகம்மது (37) என்பவர் அஸ்ரப் அலியிடம், 2வது மகள் மும்தாஜ் பேகத்தை மதுரையில் தனக்கு தெரிந்த உறவினர் மூலம் பள்ளியில் படிக்க வைப்பதாக கூறி கடந்த பிப்ரவரி 19ம் தேதி அழைத்துச் சென்றார். மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கால் பள்ளிகள் மூடப்பட்டதையடுத்து குழந்தை எங்குள்ளது, பார்க்க வேண்டும் என்று அஸ்ரப் அலி, நிர்மலா பேகம் கேட்டுள்ளனர். அதற்கு குழந்தை தனது உறவினர் வீட்டில் நலமாக இருப்பதாக கூறி சமாளித்துள்ளார். தொடர்ந்து அவ்வாறே கூறியதால் சந்தேகமடைந்த பெற்றோர் மதுரை வந்து கலெக்டரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.

 இதையடுத்து கலெக்டர், மதுரை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலகத்தில் விசாரிக்க உத்தரவிட்டார். அவர்கள் தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலக அதிகாரிகளிடம் உதவி கோரியுள்ளனர். அவர்கள் விசாரித்தில் குழந்தை கோவில்பட்டி லாயல் மில் காலனி அப்துல்ரசாக் மனைவி ரசபுநிஷாவிடம் இருப்பது தெரிய வந்தது.இதை தொடர்ந்து தூத்துக்குடி குழந்தைகள் பாதுகாப்பு நல அதிகாரி ஜோதிகுமார் உத்தரவின் பேரில் அலுவலர்கள் ஜேம்ஸ், வாணி, சுகாசினி ஆகியோர் கோவில்பட்டி கிழக்கு காவல்நிலைய இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாருடன் சென்று விசாரணை நடத்தினர். இதில் அப்துல் ரசாக் தம்பதிக்கு குழந்தை இல்லை என்பதும், நாகூரிலுள்ள ரசபுநிஷாவின் சகோதரி மூலம் அசன் முகம்மதுவிடம் இருந்த குழந்தை மும்தாஜை ஒன்றரை லட்சத்திற்கு விலைக்கு வாங்கியதாகவும் தெரியவந்தது.

இதையடுத்து குழந்தைகள் நல அலுவலர்கள் குழந்தையையும், ரசபுநிஷாவையும் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர். குழந்தை திருச்செந்தூர் அருகேயுள்ள அடைக்கலாபுரம் குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இதில் அசன்முகம்மதுவுடன் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : NAGUR ,baby girl ,school ,Nagpur , Woman ,baby girl, Nagore
× RELATED வத்திராயிருப்பு அரசு பள்ளி சார்பில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி