×

புதுவையில் மது விற்பனை கடும் சரிவு

* சில கடைகள் மூடப்படும் அபாயம்
* கலால் வருவாய் மேலும் பாதிக்கும்

புதுச்சேரி: புதுவையில் மதுபானங்களின் கிடுகிடு விலை உயர்வு காரணமாக அதன் விற்பனை கடுமையாக சரிந்துள்ளதால் மேலும் சில கடைகளை அடுத்தடுத்து மூடப்படும் சூழ்நிலை உருவாகி உள்ளது.  புதுவையில் 2 மாதங்களுக்குபின் மதுக்கடைகளை திறந்ததால் முதல்நாளில் குடிமகன்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மதுபானங்களை வாங்கிச் சென்றனர். ஆனால் சில மதுபானங்கள் தமிழகத்தைவிட இங்கு விலை உயர்வு அதிகமாக இருந்ததன் விளைவாக நேற்றுமுன்தினம் மதுக்கடைகளில் கூட்டம் வெகுவாக குறைந்தது. பெரும்பாலான மதுக்கடைகள் வெறிச்சோடி காணப்பட்டன. குறிப்பாக குறைந்த விலை மதுபானங்களின் விலை அதிகமாக உயர்த்தப்பட்டதால் மதுபிரியர்கள் வேதனையடைந்தனர். இதனால் ரூ.40க்கு ஒருபாட்டில் சாராயம் கிடைக்கவே குடிமகன்களில் பலர் அங்கு படையெடுத்த வண்ணம் இருந்தனர். இதனால் புதுச்சேரியில் மதுபானங்கள் விற்பனை கடுமையாக சரிந்தது.  விற்பனையில் சரிவு ஏற்பட்டாலும் கோவிட் வரி விதிப்பால் வருமானம் அதிகரித்திருந்தது. முதல்நாளில் புதுச்சேரியில் ரூ.3.23 கோடி, காரைக்காலில் ரூ.60 லட்சம் என மொத்தம் ரூ.3.83 கோடிக்கு மதுபானம் விற்பனையாகி இருந்தது. 2ம் நாளான நேற்றுமுன்தினம் இந்த இரண்டு பிராந்தியங்களையும் சேர்த்தே ரூ.1.35 கோடி வரைதான் மதுபானங்கள் விற்பனையாகி இருப்பதாக கலால்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் மதுக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். இதே நிலை நீடித்தால் அடுத்த சில வாரங்களில் மேலும் பல மதுக்கடைகளை மூட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்படும் அபாயம் உள்ளது.

இதனிடையே 3ம் நாளான நேற்றும் புதுச்சேரியில் உள்ள மதுக்கடைகளில் கூட்டத்தை காண முடியவில்லை. இதன் காரணமாக பெரும்பாலான கடைகளில் அங்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பும் திரும்ப பெறப்பட்டன. மாறாக சாராயக் கடைகளில் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்த காவல்துறை கண்காணிப்பு போடப்பட்டுள்ளது. இதனால் மதுபான விற்பனை மூலம் அரசுக்கு கிடைக்கும் வருமானத்திலும் பெருமளவில் வெட்டு விழுந்துள்ளது. அதுமட்டுமின்றி மாகே, ஏனாமில் மதுக்கடைகளை திறக்க கவர்னர் உடனடியாக ஒப்புதல் அளிக்க வேண்டுமென அப்பிராந்தியத்தில் உள்ள மதுபிரியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.  இதுபற்றி மதுக்கடை உரிமையாளர்கள் கூறுகையில், புதுவை மாநிலத்தில் 15 முதல் 60 வயது வரை 70 சதவீதம் பேர் மது அருந்துவார்கள். 30 சதவீத நபர்கள் மதுபானங்களை மொத்தமாக வீட்டிற்கு வாங்கிச் சென்று குடிப்பார்கள். தற்போது ஊரடங்கு காலம் என்பதால் பெரும்பாலானோர் வேலையிழந்து வருமானமின்றி தவித்து வருகின்றனர். அதனால்தான் முதல்நாளில் மதுபானம் வாங்க வந்த கூட்டம் 2வது நாளில் இல்லை. இதிலிருந்து அரசும், நாமும் ஒரு பாடத்தை கற்றுள்ளோம். அதாவது தமிழகம் உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து புதுச்சேரிக்குள் யாரும் உள்ளே வரமுடியாதவரை மதுபானம் மட்டுமின்றி எந்த வியாபாரமும் எதிர்பார்த்த அளவில் இருக்காது என்பது மதுபானக் கடைகள் திறந்த 2 நாளிலே கண்கூடாக தெரிந்துவிட்டது. தமிழக மக்களை வைத்துதான் புதுச்சேரியில் பெரும்பாலான வியாபாரங்கள், தொழில்கள் நடக்கிறது என்பது உறுதியாகி விட்டது.

 புதுவையில் மதுபானங்களின் விலையை இவ்வளவு அதிகமாக உயர்த்தியதை மதுபிரியர்களால் ஏற்க முடியவில்லை. மேலும் அதிக விலை கொடுத்து சரக்கு சாப்பிடுவதை உள்ளூர் மக்கள் பெரும்பாலும் விரும்பமாட்டார்கள். மாநிலத்துக்கு வருவாய் ஈட்டித்தரும் பொன்முட்டையிடும் வாத்தான மதுக்கடைகளின் நிலைமையே இப்படி என்றால் மற்ற வியாபாரிகளின் நிலை என்னவென்று அனைவருக்கும் எளிதாக புரிந்திருக்கும். எனவே அரசு மதுபான விலை குறைப்பு, எல்லைகளில் கெடுபிடி தளர்வு உள்ளிட்ட நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் படிப்படியாக அடுத்த சில மாதங்களிலாவது சகஜ நிலைக்கு புதுச்சேரி திரும்ப முடியும்.  வருகிற சனி, ஞாயிறுக்கிழமைகளில் ஓரளவு விற்பனையை எதிர்பார்த்துள்ளோம். அதன்பிறகும் நிலைமை சீராகவிடில் தற்போதுள்ள மதுக்கடைகளில் சிலவற்றை மூடவேண்டிய நிலைக்குகூட தள்ளப்படுவோம் என்றனர்.

கோவிட் வரியை குறைக்க அரசு திடீர் ஆலோசனை

புதுவையில் மதுக்கடைகளை திறந்தும் எதிர்பார்த்த வியாபாரம் இல்லாததால் உரிமையாளர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏற்கனவே மூடப்பட்டுள்ள 102 கடைகளை திறக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் 250 கடைகள் வரை மட்டுமே தற்போது திறக்கப்பட்ட நிலையிலும் அங்கும் வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக கலால்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அதிகாரிகளுடன் முதல்வர் மீண்டும் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றன.

இதில் மதுபானம் விற்பனை சரிவுக்கான காரணத்தை கண்டறிந்து, புதிதாக விதிக்கப்பட்ட கோவிட் வரியை சற்று குறைத்து கவர்னருக்கு கோப்பு அனுப்ப நடவடிக்கை எடுப்பது மட்டுமின்றி நீதிமன்ற உத்தரவால் மூடப்பட்டுள்ள மதுக்கடைகளை திறக்கவும், ஏனாம் மற்றும் மாகேயில் மதுக்கடைகளை திறப்பதற்கான நடவடிக்கையை அடுத்தடுத்து மேற்கொள்வது தொடர்பாக  விவாதித்து அதிகாரிகளுக்கு சில உத்தரவுகள் பிறப்பிக்கப்படலாம் என்று தெரிகிறது.

Tags : Liquor ,fall, sharply
× RELATED திண்டுக்கல்லில் தள்ளு வண்டியில் மது...