×

கொரோனா பாதிப்பில் நிதியின்றி தவிக்கும் நிலையில் நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பணிக்கு 3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு டெண்டர்?: பேட்ச் ஒர்க் பார்த்து பெருந்தொகை சுருட்ட திட்டம்

விருதுநகர்: கொரோனா பாதிப்பால் நிதியின்றி அரசுகள் தவிக்கும் நிலையில், நெடுஞ்சாலைத்துறையில் சாலைப்பணிக்கு ரூ.3 ஆயிரம் கோடிக்கு டெண்டர் விடும் நடவடிக்கை ஓசையின்றி நடந்து வருகிறது. ஏற்கனவே பாதிப்பில்லாத சாலை மீதே, சாலை போடுவது போல பணிகளை நடத்தவும் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கொரோனா தாக்கத்தால் பொருளாதார பின்னடவை அனைத்து நாடுகளும் எதிர்கொண்டு என்ன செய்வது, எப்படி தப்பித்து வெளியே வருவது என தெரியாமல் விழி பிதுங்கி வருகின்றன. இதற்கு இந்தியாவும் விதிவிலக்கல்ல. மாநில அரசுகளுக்கான உரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை என்ற போர்க்குரலை அனைத்து மாநில முதல்வர்களும் எழுப்பி வருகின்றன. மத்திய அரசு நிதி ஒதுக்காததால் கொரோனாவால் அல்லல்படும் மக்களுக்கு உரிய இழப்பீடு அளிக்க முடியவில்லை என்ற புலம்பல்கள் வெளிப்பட துவங்கி உள்ளன. தொழில்கள் முடங்கி வருவாய் இழப்பால் சிக்கன நடவடிக்கைகளை மேற்கொள்ள, அனைத்து மாநிலங்களும் முடிவெடுத்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. தமிழகத்திலும் 2020-21ம் நிதியாண்டிற்கான நிதியை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த வேண்டுமென்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

முதல்கட்டமாக மாநில நெடுஞ்சாலைத்துறை பராமரிப்பில் உள்ள அனைத்து சாலைகளும், மக்கள் பயன்படுத்தும் அளவிற்கு தரமாக இருப்பதால், துறைக்கான நிதியான சுமார் ரூ.7 ஆயிரம் கோடியை கொரோனா தடுப்பு நிதிக்கு பயன்படுத்த வேண்டுமென அறப்போர் இயக்கம் உள்பட அமைப்புகள் தெரிவித்தன. இதற்கிடையில் நெடுஞ்சாலைத்துறையில் விருதுநகர், ஈரோடு, திருப்பூர், மதுரை உள்ளிட்ட பெரும்பான்மையான மாவட்டங்களில், ஒட்டுமொத்தமாக 5 ஆண்டுகளுக்கு தனியாருக்கு பல ஆயிரம் கோடிக்கு ஏற்கனவே ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. தற்போது நடப்பாண்டிற்கான நிதியை செலவிடாமலேயே முழுமையாக எப்படி சுருட்டுவது என திட்டம் தீட்டி செயல்படுத்தும் வேலை வேகமாக நடந்து வருகிறது.
இதற்காக மாநிலத்தில் உள்ள சென்னை, விழுப்புரம், திருச்சி, கோவை, திருப்பூர், சேலம், மதுரை, திருநெல்வேலி ஆகிய 8 வட்டங்களில் உள்ள 42 டிவிஷன்கள், 200 சப்-டிவிஷன்களிலும், 5 ஆண்டுகளுக்கு முன் போடப்பட்டு மக்கள் பயன்படுத்தாமல் நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை மீண்டும் போடுவதற்கான திட்ட மதிப்பீடு அனைத்து பொறியாளர்களிடம் பெறப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தேதி மற்றும் மதிப்பீட்டு தொகை வெளிப்படையாக மக்கள் பார்வைக்கு வெளியாகவில்லை.

கொரோனா பாதிப்பு நேரத்தில் வெளியான அரசாணையில் மதிப்பீடு தெரிவித்தால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் என்பதால் தொகையை வெளியிடவில்லை. மாநிலம் முழுவதும் நல்ல நிலையில் இருக்கும் சாலைகளை போட சுமார் ரூ.3 ஆயிரம் கோடிக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர். மேலும், நல்ல நிலையில் இருக்கும் சாலைகளுக்கு, தேவையை விட கூடுதல் நிதிக்கு மதிப்பீடு பெறப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த சாலைகளை மேல்பூச்சு மட்டும் பூசி அப்படியே ‘பெருந்தொகையை’ கபளீகரம் செய்வதற்கான நடவடிக்கையாக ஓரிரு நாட்களில் ஒப்பந்தம் விட இருக்கின்றனர். ஒப்பந்தம் எடுக்கும் ஒப்பந்தக்காரர்கள் நல்ல நிலையில் உள்ள சாலைகளை கூடுதல் தொகைக்கு எடுப்பதால், கூடுதல் கமிஷன் தரும் நபருக்கே ஒப்பந்தத்தை வழங்கி அறிவிப்புகள் வெளியாக இருப்பதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

Tags : 3000 crores,road work, highway sector,coronation disrupted,Patch Work
× RELATED 7 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை