×

மத்திய அரசு சலுகைகளால் ஒரு பலனும் இல்லை மரணத்தின் விளிம்பு வரை வந்து விட்டோம் நிவாரணமாக தந்தால்தான் இனி பிழைப்போம்

* மீள வழியில்லை என தொழில் துறையினர் கவலை

மத்திய அரசின் பல்வேறு கொள்கை முடிவுகள் தொழில்துறைகளுக்கு அதிக பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கின்றன. பண மதிப்பு நீக்க நடவடிக்கை, நாட்டில் பணப்புழக்கத்தை அடியோடு நிறுத்தி விட்டது. இதுபோல் ஜிஎஸ்டி அறிமுகம் செய்தபோது இதனால் அதிகம் தடுமாற்றம் அடைந்தது சிறு தொழில்கள்தான். இப்படி ஒவ்வொரு முறை வீழும்போதும் எழ முடியாத அளவுக்கு ஏதேனும் ஒரு பாதிப்பு சிறு, குறு, நடுத்தர தொழில் துறையினருக்கு ஏற்பட்டிருக்கிறது. இப்போதும், கொரோனா ஊரடங்கால் இந்த துறைக்கு ஏற்பட்ட பாதிப்பு சொல்லி முடியாது.  கடந்த 2018-19 நிதியாண்டு அறிக்கையின்படி நாடு முழுவதும் சுமார் 6.34 கோடி, குறு, சிறு, நடுத்தர தொழில்கள் (எம்எஸ்எம்இ) உள்ளன. இவற்றில் ஏறக்குறைய 51 சதவீத தொழில்கள் கிராமப்பகுதிகளில்தான் இருக்கின்றன.  

கோவை மாவட்டத்தில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான சிறு குறு, நடுத்தர மற்றும் பெரும் தொழில் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. மத்திய அரசு கடைசியாக வெளியிட்ட 2015-16 புள்ளி விவரப்படி, இவற்றில் தாமாக முன்வந்து உத்யோக் ஆதார் பதிவு செய்த நிறுவனங்களின் எண்ணிக்கை 1,11,290 மட்டுமே.  வெட் கிரைண்டர்ஸ், பம்புகள், பிளாஸ்டிக் தொழிற்சாலைகள் என சுமார் 60 சதவீத தொழிற்சாலைகள் கிராமப்புறங்களிலும், 40 சதவீதம் தொழிற்சாலைகள் நகர்ப்புறங்களிலும் செயல்படுகின்றன. கிராமப்புறங்களை சுற்றி சுமார் 325 பெரிய தொழில் நிறுவனங்களும், மாநகராட்சிப் பகுதிகளை சுற்றி சுமார் 100 பெரிய தொழில் நிறுவனங்களும் உள்ளன. கோவையில் உள்ள பம்புகள் தயாரிக்கும் தொழில் நிறுவனங்களில் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

 கோவையில் குறுந்தொழில் முனைவோர்கள் மட்டும் 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் பேர் வரை உள்ளனர். அவர்களின் நிறுவனங்களில் 1 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.  குறுந்தொழில்கள் முக்கியமாக ஜாப் ஆர்டர்களை நம்பியே உள்ளனர். இதனால் லட்சக்கணக்கான குடும்பங்களின் பிழைத்தன. ஆனால் கொரோனா இவர்களின் வாழ்க்கையை புரட்டிபோட்டது. தொழில் முனைவோரும் பாதிக்கப்பட்டனர்.  இதில் இருந்து மீளும் வகையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பல்வேறு பொருளாதார ஊக்குவிப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பிணையில்லாமல் ₹3 லட்சம் கோடி கடனுதவி வழங்கப்படும்.

இந்த கடன்களை திருப்பி செலுத்த 4 ஆண்டு அவகாசம் வழங்கப்படுகிறது. அசலை 12 மாதத்துக்கு பிறகு செலுத்த தொடங்கலாம். வட்டி மாறாமல் இருக்கும். வரும் அக்டோபர் 31ம் தேதி வரை இந்த திட்டம் அமலில் இருக்கும். இதனால் 45 லட்சம் சிறு குறு தொழில் நிறுவனங்கள் பலன் பெறும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.  ஊழியர்களின் பி.எப். பங்களிப்பை 3 மாதங்களுக்கு செலுத்துவது உள்ளிட்ட  சலுகைகளும் வெளியாகின. ரிசர்வ் வங்கியும் இஎம்ஐ. சலுகை மற்றும் வங்கிகள் கடன் வழங்குவதை அதிகரிக்க ஏதுவாக அறிவிப்புகளை வெளியிட்டது. ஆனால் மத்திய அரசின் இந்த அறிவிப்புகளால் எந்த பலனும் இல்லை என சிறு, குறு தொழில் முனைவோர் தெரிவிக்கின்றனர்.

 கோவை சிட்கோ பகுதியில் பல தொழில் நிறுவனங்கள் செயல்பட துவங்கிவிட்டன. ஆனாலும் வடமாநில தொழிலாளர்கள் இடம்பெயர்ந்ததால், நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு கடன் திட்டங்களை அறிவித்தாலும், சில நிறுவனங்களின் முந்தைய கடன்களை காரணம் காட்டி புதிய கடன்களை தர வங்கிகள் மறுக்கின்றன. சில வங்கிகள், இதுதொடர்பாக மத்திய அரசிடம் இருந்து சுற்றறிக்கை வரவில்லை என்கின்றன.  குறு, சிறு, நடுத்தர தொழில்கள் தற்போது எழுந்து வரவே முடியாத நிலையில் இருக்கின்றன.

ஏறக்குறைய மரணத்தின் விளிம்பு வர வந்து விட்டோம். இந்த சமயத்தில் கடன் உதவி மட்டுமே வழங்குவது எந்த வகையிலும் உதவாது. இது கண்துடைப்பு அறிவிப்புதான். இதுவரை ஜிஎஸ்டி முலம் அபராதமாக வசூலித்த தொகையை திருப்பி தருவதுடன், 10 சதவிகித தொகையையும் மத்திய அரசு தொழில் முனைவோருக்கு தந்து உதவிட வேண்டும். ஏற்கெனவே, பல சிறு குறு தொழில்கள் வாங்கிய கடனை கூட திருப்பி செலுத்த படாத பாடுபட வேண்டியுள்ளது. மேலும் கடன் வாங்கினால், மீண்டு வரவே முடியாத சூழ்நிலை உருவாகும். நிவாரணமாக வழங்கினால் மட்டுமே பிழைத்து வர முடியும் என்று வேதனையுடன் கூறுகின்றனர் சிறு, குறு தொழில்துறையினர்.

வங்கிகள் கடன் தரவே தயங்குது,..தேவைக்கு என்னதான் செய்வது 5 சதவீதத்தில் கடன்:
மத்திய அரசின் 3 லட்சம் கோடி ஒதுக்கீட்டால் எந்த பலனும் இல்லை. வங்கிகளில் எந்த நிபந்தனையும் இன்றி 5 லட்சம் வரை சொத்து பிணையும் இல்லாமல் உடனடியாக 5 சதவிகிதத்தில் கடன் வழங்க வேண்டும். அதை திருப்பி செலுத்த ஓராண்டு அவகாசம் தர வேண்டும். 3 லட்சம் கோடி கடன் திட்டம் ஏற்கனவே நடைமுறையில் உள்ளதுதான். தொழில்முனைவோர் ஏற்கனவே வாங்கிய கடன், கடன் கட்டிய விதம், பண புழக்கம் உள்ளிட்டவற்றை ஆராய்ந்துதான் வங்கிகள் கடன் கொடுக்கும். மத்திய, மாநில அரசிடம் நாங்கள் கேட்பது நிவாரணம்தான். - ஜேம்ஸ், தலைவர், தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர்கள் சங்கம் கோவை.

தொழில் முனைவோர் கொந்தளிப்புஇந்த கடன் திட்டம் என்பது உடனடி நிவாரணம் இல்லை. நிபந்தனையின்றி வங்கிகள் கடன் தர வேண்டும். அதற்கான அறிவிப்புகள் முற்றிலும் இல்லை. 3 மாதம் காலம் இஎம்ஐ தள்ளிவைப்புபோல் இதுவும் ஒரு கண் துடைப்புதான். வங்கிகளுக்கு முறையான அறிவிப்புகளை மத்திய அரசாங்கம் வழங்குவதில்லை. தொழில்துறையினர் அனைவரும் மிகவும் கொந்தளிப்பில் உள்ளனர் - மணிராஜ், தலைவர் கோவை மாவட்ட பம்புசெட் மற்றும் உதிரிபாகங்கள் தயாரிப்பாளர் சங்கம். வங்கிகளுக்கு அரசாணை வரலையாம் கோவை சிட்கோவில் 350க்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் உள்ளன.

மத்திய அரசின் 3 லட்சம் கோடி கடன் திட்டம் வங்கிகள் ஒத்துழைப்பு அளித்தால்தான் சாத்தியமாகும். ஒரு சிலருக்கு வங்கிகளில் மத்திய அரசு அறிவித்துள்ள கடன்கள் வழங்கப்படுகின்றன; ஒரு சிலருக்கு வழங்கப்படுவதில்லை. சில வங்கிகள் அரசாணை வரவில்லை என்கின்றனர்.- மதிவாணன், துணைத் தலைவர், கோயமுத்தூர் சிட்கோ இண்டஸ்ட்ரியல் மேனுபேக்சரிங் வெல்பேர் ஆசோசியேசன்.

கைவிரிக்கும் வங்கிகள்
காட்மா சங்கத்தின்கீழ் 4500 சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உள்ளன. பெரிய நிறுவனங்களின் ஜாப் ஆர்டர்களை நம்பியே இந்த தொழில் நிறுவனங்கள் உள்ளன. மத்திய அரசின் 3 லட்சம் கோடி கடன் திட்டம், 50 ஆயிரம் கோடி சிறப்பு நிதி திட்டம் குறித்து வங்கிகளிடம் கேட்டபோது, இதுவரை அரசு தரப்பில் இருந்து சுற்றறிக்கை வரவில்லை என்கின்றனர் - சிவக்குமார், தலைவர், கோவை, திருப்பூர் மாவட்ட ஊரக தொழில் முனைவோர் சங்கம். மேலும் கடனாளியாக்கும்‘‘ஊரடங்கால் நகைக்கடைகள் மூடப்பட்டதால் ₹5 ஆயிரம் கோடி வரை வர்த்தகம் பாதித்துள்ளது.

மத்திய அரசு அறிவித்துள்ள திட்டம், கடனாளியை மேலும் கடனாளி ஆக்குவதுதான். நாங்கள் கடன் கேட்கவில்லை. நிவாரணம்தான் கேட்கிறோம். பொற்கொல்லர்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை. வெள்ளிப்பட்டறைகள் சுமார் 150 உள்ளது. அதிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். - முத்து வெங்கட்ராம், கோவை மாவட்ட தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்க தலைவர்.


Tags : government ,death , Federal government, industry, corona, curfew
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...