×

தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு: ஜெ. வீடு நினைவிடமாக்குவதை மறு பரிசீலனை செய்ய வேண்டும்

* ஒவ்வொரு முதல்வரின் வீடுகளையும் நினைவிடமாக மாற்றம் செய்வதால் பொதுமக்கள் பணம் தான் வீணாகும்.
*  போயஸ் கார்டன் இல்லத்தை முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றம் செய்யலாம்.
* போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்கள் பணம் தான் வீணாகும்.அந்த இடத்தை முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகமாக
மாற்றுவது குறித்து அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும்.

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வரின் வாரிசு தீபா, தீபக் தான் என்றும் ஜெயலலிதா வாழ்ந்த இடத்தை நினைவில்லமாக மாற்றுவது குறித்து தமிழக அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம் சொத்துக்களை நிர்வகிக்க நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து  அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்ளிட்ட ரூ.913 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன. இந்த சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி கே.கே.நகரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் புகழேந்தி என்பவரும் ஜானகிராமன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என அறிவித்துவழக்கை தள்ளுபடி செய்தார்.இதை எதிர்த்து புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் மேல் முறையீடு செய்தனர். இந்த மேல் முறையீடுவழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.வழக்கை விசாரித்த நீதிபதிகள் இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோரை எதிர்மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். இதையடுத்து, தீபா, தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளாக அறிவிக்க கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது, வருமான வரித்துறை ஒரு மனுவை தாக்கல் செய்தது. அதில், ஜெயலலிதா வருமானவரித் துறைக்கு ரூ.6 கோடியே 62 லட்சத்து 97,720 வருமான வரிப்பாக்கியும் ரூ.10 கோடியே 12 லட்சத்து 1,0407 செல்வ வரி பாக்கியும் செலுத்த வேண்டியுள்ளதால் அவரது போயஸ் கார்டன் இல்லம், மந்தைவெளியில் உள்ள இடம், பார்சன் காம்பளக்சில் உள்ள இடம் உள்ளிட்ட சொத்துக்களை வருமான வரித்துறை முடக்கி வைத்துள்ளது என்று கூறப்பட்டிருந்தது. இந்த வழக்கின் வாதங்கள் முடிந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதிகள் கிருபாகரன், அப்துல்குத்தூஸ் ஆகியோர் நேற்று தீர்ப்பளித்தனர்.

தீர்ப்பில் கூறியிருப்பதாவது:  தமிழகத்தின் முதல்வராக 4 முறை பதவி வகித்தவர் ஜெயலலிதா. தமிழக மக்களின் நன்மதிப்பை பெற்றவர். அவருக்கு வாரிசு இல்லை என்பதால் அவரது வாரிசு தொடர்பான வழக்கை இந்த நீதிமன்றம் விசாரிக்க வேண்டியுள்ளது. ஜெயலலிதா திருமணம் செய்து கொள்ளவில்லை. அவருக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் இருந்தார். ஜெயலலிதாவுக்கு வாரிசு இல்லாததால் அவரது வாரிசுகளாக தங்களை அறிவிக்க கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயக்குமாரின் வாரிசுகளான தீபா, தீபக் ஆகியோர் இந்த நீதிமன்றத்தை அணுகியுள்ளனர்.

ஜெயலலிதாவின் தந்தை ஜெயராமன் மறைந்து நீண்ட நாட்களான நிலையில் அவரது மனைவி சந்தியா கடந்த 1971ல் வேதா நிலையம் உள்ளிட்ட அவரது சொத்துக்கள் அனைத்திற்கும் ஜெயலலிதா தான் வாரிசு என்று உயில் எழுதி வைத்தார். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு ஜெயக்குமாரின் வாரிசுகள் தங்களை ஜெயலலிதாவின் 2வது வாரிசாக அறிவிக்க கோரியுள்ளனர்.ஜெயலலிதாவுக்கு சொந் தமான சொத்துக்களின் மதிப்பு 188 கோடியே 48 லட்சத்து 66,305 என்று மதிப்பிடப்பட்டிருந்தது. தற்போது இந்த சொத்தின் மதிப்பு 913 கோடி 42 லட்சத்து 68,179 என்று மனுதாரர் புகழேந்தி குறிப்பிட்டுள்ளார். ஜெயலலிதாவுக்கு 1000 கோடிக்கும் மேல் சொத்துக்கள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கில் தீபா, தீபக் ஆகியோர் தனது பாட்டி எழுதி வைத்துள்ள உயில், தங்களது தந்தையின் இறப்பு சான்றிதழ், அவரது வாரிசு சான்றிதழ், ஆர்.கே.நகர் தொகுதி தேர்தலின்போது ஜெயலலிதா தாக்கல் செய்த பிரமாண பத்திரம், கிண்டி தாசில்தார் தந்துள்ள வாரிசு சான்று உள்ளிட்ட ஆவணங்களை தாக்கல் செய்துள்ளனர். தீபா மற்றும் தீபக் ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்தில் தான் பிறந்துள்ளனர். இந்து வாரிசு சட்டத்தின்படி ஒருவருக்கு வாரிசு இல்லையென்றால் அவரது ரத்த சொந்தம் வாரிசாக முடியும். அந்த சட்டப் பிரிவுகளின் அடிப்படையில் ஜெயலலிதாவின் வாரிசுகளாக தங்களை அறிவிக்க தீபா, தீபக் கோருகிறார்கள். உயில் எதுவும் இல்லாத நிலையில் மூன்றாம் நபர் கேவியட் மனு தாக்கல் செய்ய முடியாது.மனுதாரர் புகழேந்தி தான் அதிமுவில் அம்மா பேரவை நிர்வாகி என்று கூறியுள்ளார்.

இரண்டாம் நிலை வாரிசுதாரர்கள் இருக்கும் போது கேவியட் தாக்கல் செய்தவர் எந்த உரிமையையும் கோர முடியாது. இதை உச்ச நீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் தெளிவுபடுத்தியுள்ளது. அதன் அடிப்படையில் தான் புகழேந்தி, மற்றும் ஜானகிராமன் ஆகியோரின் மனுவை தள்ளுபடி செய்து தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதா விட்டுச் சென்ற சொத்துக்களுக்கு தீபா, தீபக் ஆகியோர் தான் இரண்டாம் நிலை வாரிசு என்று இந்த நீதிமன்றம் உத்தரவிடுகிறது. அவர்கள் இருவரும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளதை போல் அவர்களின் அத்தை ஜெயலலிதாவின் சொத்துகளின் சிலவற்றை வைத்து ஜெயலலிதா பெயரில் அறக்கட்டளை தொடங்கி பொது சேவைக்காக அதை பயன்படுத்த வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் 8 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இந்த வழக்கில் வருமான வரித்துறை சார்பில் ஏ.பி.சீனிவாசன் ஆஜராகி, ஜெயலலிதா வருமான வரி மற்றும் செல்வ வரியாக 16 கோடியே 74 லட்சத்து 97 ஆயிரம் கட்ட வேண்டியுள்ளதால் போயஸ் கார்டன் இல்லம் உள்ளிட்ட 4 சொத்துக்களை வருமான வரித்துறை 2007 மார்ச் 13 முதல் முடக்கி வைத்துள்ளது என்று தெரிவித்துள்ளார். அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வக்கீல் ரஸ்னிஸ் பாதியில் வாதிடும் போது, ஜெயலலிதா மீது அமலாக்கத்துறையில் எந்த வழக்கும் நிலுவையில் இல்லை என்று தெரிவித்துள்ளார். தமிழக அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், சிறப்பு அரசு வக்கீல் பாப்பையா ஆஜராகி மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த போயல் இல்ல வீட்டை அவரது நினைவிடமாக மாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு தீபா தரப்பு வக்கீல் தொண்டன் சுப்பிரமணியன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மனுதாரர் புகழேந்தி தரப்பில் ஆஜரான வக்கீல் நந்தகுமார் வாதிடும் போது, மரணமடைந்தவர் எந்த உயிலையும் எழுதி வைக்காமல் சென்றிருந்தால் அவரின் சொத்துக்களுக்கு நிர்வாகியை நியமிக்க கோர  முடியும் என்று வாதிட்டுள்ளார். ரத்த சம்பந்த வாரிசு இருக்கும் போது நிர்வாகியை நியமிக்க மூன்றாம் நபருக்கு உரிமை இல்லை. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை இந்த நீதிமன்றம் உறுதி செய்து உத்தரவிடுகிறது.
ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் அவர் 1991 முதல் 1996 வரை 58 கோடியே 2 லட்சத்து 48,215 அதிகமாக சொத்து சேர்த்ததாக கூறப்பட்டுள்ளது. ஆனால், 2017ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி நிலவரப்படி ஜெயலலிதாவுக்கு 913 கோடியே 41 லட்சத்து 68,179 என்று மனுதாரர் தரப்பில் கூறப்பட்டுள்ளது. போயஸ் கார்டன் சொத்து மட்டும் ₹100 கோடி மதிப்புள்ளது என்று வக்கீல்கள் தரப்பில் கூறப்படுகிறது. இந்த இடத்தை அரசு கையகப்படுத்தினால் அதற்காக ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு நோட்டீஸ் தர வேண்டும்.

அவர்களின் கருத்தை கேட்டு அவர்களுக்கு இழப்பீடு தரவேண்டும். அந்த இடத்தை கையகப்படுத்தி அதற்காக பெரும் அளவில் இழப்பீடு தருவதற்கு பதில் அந்த தொகையை அடிப்படை கட்டமைப்பு, குடிநீர் வசதி, நீராதாரங்களை சுத்தப்படுத்துதல் போன்ற பணிகளுக்கு பயன்படுத்தலாம். ஏராளமான அத்தியாவசிய தேவைகளை ஒரு மக்கள் நலன் சார்ந்த அரசில் உள்ள நிலையில் பொதுமக்களின் பணம் நினைவிடங்களை கட்டி வீணாக்க கூடாது. மறைந்த தலைவர்களின் கோட்பாடுகளை பின்பற்றி சமுதாயத்தின் மேம்பாட்டுக்காக பயன்படுத்தலாம். மறைந்த முதல்வருக்கு அவரது வீட்டிலேயே நினைவிடம் கட்டுவதால் எந்த திட்டமும் முடிவுக்கு வந்துவிடாது.

ஒவ்வொரு முதல்வரின் வீட்டையும் நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்கள் பணம் தான் தேவையில்லாமல் நினைவிடங்களுக்கு மட்டுமே செலவாகும். 10 கிரவுண்டு பரப்பில் உள்ள போயஸ் கார்டன் வீடு முதல்வரின் வீடு மற்றும் அலுவலகமாக 15 ஆண்டுகள் செயல்பட்டு வந்தது. அங்கு முதல்வருக்கான அலுவலகம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் உள்ளன. எனவே, போயஸ் கார்டன் இல்லத்தை முதலமைச்சரின் இல்லம் மற்றும் அலுவலகமாக பயன்படுத்த முடியும். எனவே, போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் “முதலமைச்சரின் இல்லம் மற்றும் அலுவலகமாக” மாற்ற இந்த நீதிமன்றம் கருத்து தெரிவிக்கிறது. அவரது இல்லத்தை நினைவிடமாகத் தான் மாற்ற வேண்டும் என்று மாநில அரசு முடிவு செய்யும் பட்சத்தில் அந்த இடத்தின் ஒரு பகுதியை நினைவிடமாகவும், மீதமுள்ள பகுதியை முதலமைச்சரின் இல்லம் மற்றும் அலுவலகமாக பயன்படுத்துவது நன்றாக, பயனுள்ளதாக இருக்கும்.

எனவே, இது தொடர்பாக தீபா, தீபக் ஆகியோருக்கு அரசு நோட்டீஸ் அனுப்பி அவர்களின் கருத்தை கேட்க வேண்டும். போயஸ் கார்டன் இல்லத்தை நினைவிடமாக மாற்றுவதால் பொதுமக்கள் பணம் தான் வீணாகும் அந்த இடத்தை முதல்வர் இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்றுவது குறித்து அரசு மறு பரிசீலனை செய்ய வேண்டும். தீபா, தீபக் ஆகியோர் போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்வதை பாதுகாப்பு பணியில் உள்ளவர்கள் அனுமதிப்பதில்லை என்று இருவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இருவருக்கும் 24 மணி நேரம் பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும். அதற்கான செலவை தீபா, தீபக் ஏற்க வேண்டும். இந்த செலவினங்களுக்காக அவர்கள் ஏதாவது ஒரு சொத்தை விற்பனை செய்யலாம். எனவே, இந்த வழக்கில் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரிய வழக்குகளை இந்த நீதிமன்றம் தள்ளுபடி செய்கிறது. தனி நீதிபதி உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.



Tags : Chennai High Court ,Tamil Nadu ,government ,house , Government of Tamil Nadu, Chennai High Court, Jayalalithaa, house memorial
× RELATED சட்டமன்ற நிகழ்வுகள் நேரடி ஒளிபரப்பு;...