×

கங்கையை தூய்மைப்படுத்த 20,000 கோடி செலவிடுவது போல் காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும்: அன்புமணி

சென்னை: பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வெளியிட்ட அறிக்கை:   ஈரோடு நகரத்தையொட்டிய பகுதிகளில் செயல்பட்டு வரும் சாயப்பட்டறைகள், சலவை ஆலைகள், அச்சு தொழிற்சாலைகள் போன்றவற்றிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சுத்திகரிக்கப்படாமல் காவிரி ஆற்றில் கலக்கவிடப்பட்டு வந்தது. ஊரடங்கின் காரணமாக அனைத்து தொழிற்சாலைகளும் மூடப்பட்டதால், காவிரியில் கழிவு நீர் கலப்பது முடிவுக்கு வந்தது. காவிரி ஆறும் தூய்மையடைந்தது. ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்டு ஆலைகள் செயல்பட அண்மையில் அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் ஓடை போல ஓடி காவிரி ஆற்றில் கலக்கிறது. கழிவு நீரில் அமிலம் கலந்திருப்பதால் அப்பகுதியில் கடுமையான கார நெடி வீசுவதுடன், அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல், தோல் அரிப்பு போன்ற பாதிப்புகள் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இவ்வளவுக்குப் பிறகும் தொழிற்சாலைகளில் இருந்து கழிவு நீர் வெளியேற்றப்படுவதை தடுக்க மாசுக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.
காவிரி ஆறு 25-க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக திகழ்வதால், அதை காக்கவும், தூய்மைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். கங்கை ஆற்றைத் தூய்மைப்படுத்த மத்திய அரசு நடப்பாண்டு இறுதிக்குள் மொத்தம் ரூ.20,000 கோடியை செலவிடவுள்ளது. அதேபோல், காவிரியை தூய்மைப்படுத்தும் திட்டத்திற்கான நிதியையும் மத்திய அரசு வழங்க வேண்டும். இவ்வாறு அன்புமணி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


Tags : Ganga Cauvery , Ganga, Cauvery, Finance, Central Government, Anumani
× RELATED சென்னையிலிருந்து பீகார் சென்ற கங்கா...