×

தேர்தல் நெருங்குவதையொட்டி திமுக நிர்வாகிகள் மீது திட்டமிட்டு பொய் வழக்குகள் போடுவதை நிறுத்த வேண்டும்: டிஜிபியிடம் திமுக சட்டத்துறை சார்பில் புகார் மனு

சென்னை: தமிழகத்தில் தேர்தல் நெருங்குவதயொட்டி திட்டமிட்டு திமுக நிர்வாகிகள் மீது ஒரே காரணத்திற்காக பல இடங்களில் பொய் வழக்குகளை பதிவு செய்வதை நிறுத்த கோரி திமுக சட்டத்துறை சார்பில் டிஜிபி திரிபாதியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சென்னை தமிழக காவல் துறை இயக்குனர் அலுவலகத்தில் திமுக சட்டத்துறை தலைவர் சண்முக சுந்தரம் தலைமையில்,  முதன்மை செயலாளர் கே.என்.நேரு, நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு, சட்டத்துறை செயலாளர் கிரிராஜன், மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் தமிழக டிஜிபி திரிபாதியை நேற்று நேரில் சந்தித்து புகார் மனு ஒன்று அளித்தனர்.

பின்னர் திமுக சட்டத்துறை தலைவர் சண்முக சுந்தரம் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகம் அரசும் மற்றும் மத்திய அரசும் மீது எந்த வித எதிர் கருத்து வரக்கூடாது என்பதற்காக, எதிர்கருத்து கூறும் திமுகவினர் மீது திட்டமிட்டு பொய் வழக்கு போடப்படுகிறது. ஒரு குற்றத்திற்காக பல இடங்களில் திமுகவினர் மற்றும் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. ஏன் என்றால் தேர்தல் வரபோகின்ற வருடம் என்பதால்,  திமுகவினர்கள் மீது அதிக வழக்குகள் போடப்படுகிறது. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு மீது  கோவையில் முதல் வழக்கு பதிவு செய்து பின்னர் திருநெல்வேலி, சேலம் போன்ற பல மாவட்டங்களில் வழக்குகள் பதிவு செய்து வருகின்றனர்.  டி.ஆர்.பாலு மற்றும் எம்பி தயாநிதிமாறன் ஆகியோர் தலைமை செயலாளரை சந்தித்து வெளியே வந்த ஒரு நிகழ்வுக்காக பல இடங்களில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது.

தேர்தல் வரும் நேரத்தில் அவர்களை தடுக்க வேண்டும் என்ற உள் நோக்கத்தில் தலைவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அதேபோல், ஆர்.எஸ்.பாரதி மீதும் பல இடங்களில் வழக்கு பதிவு செய்து நிலுவையில் இருக்கிறது. அரசாங்கங்கள் மீது அதாவது தமிழக மற்றும் மத்திய அரசு மீது எந்த வித எதிர்கருத்துக்களும் வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். திமுகவினர் மீது வழக்குகள் பதிவு செய்கின்றனர். எனவே திட்டமிட்டு திமுகவினர் மீது பொய் வழக்கு பதிவு செய்வதை உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று நாங்கள் டிஜிபி திரிபாதியிடம் புகார் மனு கொடுத்துள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : DMK ,executives ,election , Elections, DMK Executives, DGP, DMK Law Department
× RELATED பாமக நிர்வாகிகள் 50 பேர் திமுகவில் இணைந்தனர்