×

வட இந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள் தமிழகத்தை தாக்குமா?விவசாயிகள் அச்சம்; முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரம்

சென்னை: வட இந்தியாவை அச்சுறுத்தும் வெட்டுக்கிளிகள் தமிழகத்துக்குள் புகுந்தால் அதை கட்டுப்படுத்துவது குறித்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளது. அதேநேரம் தமிழகத்துக்குள் வர வாய்ப்பு குறைவு என்று வேளாண் துறை தெரிவித்துள்ளது.    ஆப்பிரிக்க, அரேபிய நாடுகளைத் தாக்கிய வெட்டுக்கிளிகளின் படையெடுப்பு இந்தியாவிலும் தாக்குதலை தொடங்கியிருப்பது விவசாயிகள் மத்தியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தில், வெட்டுக்கிளிகள் தாக்குதல் தொடங்கியுள்ளது. அங்கிருந்து, அரியானா, குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம் மாநிலங்களுக்கும், வெட்டுக்கிளிகள் படையெடுத்து, பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன. வெட்டுக்கிளிகளை சமாளிக்க முடியாமல், விவசாயிகளும், அம்மாநில வேளாண் துறையினரும் திணறி வருகின்றனர்.

 தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும், நெல் உள்ளிட்ட தானியங்கள், எண்ணெய் வித்துக்கள், பருப்பு வகைகள், சிறுதானியங்கள் சாகுபடிகளைகட்டி வருகிறது. காய்கறிகள், பழங்கள், வாசனைப் பொருட்கள் உள்ளிட்ட தோட்டக்கலை பயிர்கள் சாகுபடியும் நடந்து வருகிறது. வெட்டுக்கிளிகள் படை எடுத்தால், பயிர்கள் நாசமாகி விடும் என்பதால், விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.   வட இந்தியாவில் 5 மாநிலங்களில்  மொத்தம் 8 லட்சம் ஏக்கர் நிலங்களை இந்த வெட்டுக்கிளிகள் நாசம் செய்துள்ளது.  ஒரு நாளுக்கு 180 கிமீ தூரம் இந்த வெட்டுக்கிளிகள் பறக்கிறது.

ஒரு குழுவில் 50 ஆயிரம் முதல் 2 லட்சம் வெட்டுக்கிளிகள் இருக்கும். கூட்டம் கூட்டமாகத்தான் இந்த வெட்டுக்கிளிகள் வரும். தற்போது மகாராஷ்டிரா வரை இந்த வெட்டுக் கிளிகள் வந்துள்ளது.  இதனால் கர்நாடகா மாநிலம் வழியாக தமிழகத்துக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது என்று விவசாயிகள் அச்சம் தெரிவித்து வருகின்றனர்.  ஆனால் வெட்டுக்கிளிகள் படை தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண் துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகள் கூறியதாவது:    தமிழகத்தில் வெட்டுக்கிளிகள் பாதிப்பு ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை.

வெட்டுக்கிளிகளின் நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. வெட்டுக்கிளிகளை கட்டுப்படுத்த பயிர் பாதுகாப்பு மருந்தான வேம்பு சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்தை பயன்படுத்தலாம். மாலத்தியான் மருந்தினை, தெளிப்பான்கள், பெரிய டிராக்டர், தீயணைக்கும் இயந்திரம் மூலம் பறந்த அளவில் தெளித்து கட்டுப்படுத்தலாம். உயிரியல் கட்டுப்பாடு காரணியான மெட்டாரைசியம் அனிசோபிலே என்ற எதிர் உயிர் பூஞ்சாணத்தினை தெளித்து கட்டுப்படுத்தலாம். வெட்டுக்கிளிகளை சாப்பிடும் கோழி மற்றும் பறவைகள் பயன்படுத்தியும் கட்டுப்படுத்தலாம்.  அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தினை ஒட்டுமொத்த வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம். தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறது.

 இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.   இதுகுறித்து தமிழக விவசாயத் துறை அமைச்சர் துரைக்கண்ணன் கூறுகையில், ‘‘வெட்டுக்கிளி நகர்வு குறித்து மத்திய அரசு மூலம் கண்காணிக்கப்படுகிறது. தமிழகத்தில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பது குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. அப்படியே தமிழகத்தில் வந்தாலும், அதை கட்டுப்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார். அதில்  நான் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் கலந்து கொண்டோம். அதில் பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி தடுப்பு நடவடிக்கைகளும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைளும் தீவிரமாக எடுத்து வருகிறோம்’’ என்றார்.

ஒரு நாள் உணவு 80,500 கிலோ பயிர்:  வெட்டுக்கிளிகள் படையெடுப்பின்போது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 4 கோடி அளவு எண்ணிக்கையில் இருக்கும். இது ஒரு நாளைக்கு 80,500 கிலோ பயிர்களை உணவாக உட்கொள்ளும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இது 35,000 மனிதர்கள் உட்கொள்ளும் உணவுக்கு நிகரானது என்பது அதிர்ச்சி தரும் தகவலாக உள்ளது.


Tags : attack ,North India ,Tamil Nadu , North India, Locusts, Tamil Nadu, Farmers
× RELATED ஜாதி, மத சண்டையை உருவாக்கி குளிர் காய்கிறது பாஜ: கனிமொழி எம்பி தாக்கு