×

தனியார் மயமாக்குவதில் படு தீவிரம்: பாரத் பெட்ரோலியம் விற்பனைக்கு அவகாசம் ஜூலை 31 வரை நீட்டிப்பு: ஊரடங்கிலும் ஓயாத முயற்சி

புதுடெல்லி: பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தை விற்பனை செய்ய தீவிரம் காட்டி வரும் மத்திய அரசு, ஏலத்தில் பங்கேற்பதற்கான தேதியை ஜூலை 31 வரை நீட்டிப்பு செய்துள்ளது.  மத்திய அரசு நிதி நெருக்கடியை சமாளிக்க பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்ய முடிவு செய்தது. பொதுத்துறை பங்கு விற்பனை மூலம் ₹2.1 லட்சம் கோடி திரட்ட பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. முதல்கட்டமாக பாரத் பெட்ரோலியம்(பிபிசிஎல்), ஷிப்பிங் கார்பரேஷன் ஆஃப் இந்தியா(எஸ்சிஐ) உள்ளிட்ட 5 பொதுத்துறை நிறுவனங்களில் தனது பங்குகளை விற்பதன் மூலம் 65,000 கோடி ரூபாய் நிதி திரட்ட திட்டமிட்டது.  இதில், பாரத் பெட்ரோலியத்தையும் (பிபிசிஎல்) தனியார்மயமாக்க கடந்த ஆண்டு நவம்பரில் ஒப்புதல் பெறப்பட்டது.

பாரத் பெட்ரோலியத்தில் அரசுக்கு 52.98 சதவீதம், ஷிப்பிங் கார்ப்பரேஷனில் 63.8 சதவீதம் பங்குகள் உள்ளன. இதில், மத்திய அரசு தனது பங்கான 52.98 சதவீதம் முழுவதையும் விற்கப்போகிறது.   பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு 98,223 கோடி. இதில், மத்திய அரசு வைத்துள்ள பங்குகளின் மதிப்பு 36,159 கோடி. தனியாருக்கு விற்கும்போது இதுவே அடிப்படை விலையாக கொண்டு கணக்கிடப்படலாம். இதுபோன்ற ஒரு நிறுவனத்தை மீண்டும் உருவாக்க வெளிச்சந்தை மதிப்பின்படி 9 லட்சம் கோடி ஆகும். எனவே, இதை தனியார் மயம் ஆக்குவதால் அரசுக்கு 8 லட்சம் கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்படும் என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

 இருப்பினும், பங்கு விற்பனையில் மத்திய அரசு படு தீவிரம் காட்டி வருகிறது. முன்பு, இந்த நிறுவனத்தை வாங்க ஏலம் கேட்போர் சமர்ப்பிக்க ஜூன் 13ம் தேதி வரை அவகாசம் வழங்கப்பட்டது. தற்போது இது மீண்டும், ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.  நிதிப்பற்றாக்குறையை ஈடுகட்ட, பொதுத்துறை நிறுவன விற்பனையில் கொரோனா ஊரடங்கிலும் மத்திய அரசு தீவிரம் காட்டி வருவது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Bharat Petroleum , Private Courtship, Bharat Petroleum, Curfew
× RELATED ஒன்றிய அரசின் சட்டத்தை கண்டித்து...