×

நேரில் வராவிட்டாலும் வீடியோகாலில் வாழ்த்தலாம்; மணமக்களுக்கு மொய் அனுப்பும் நவீன திருமண அழைப்பிதழ்: திருப்பத்தூர் அச்சக உரிமையாளர் சாதனை

திருப்பத்தூர்: கொரேனா ஊரடங்கு உத்தரவால் திருமணம், காதணி விழா உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகள் குறைந்த உறவினர்களுடன் வீடுகளிலேயே நடைபெறுகிறது. இந்நிலையில் திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த ஒரு அச்சகத்தில் நவீன முறையில் ‘காணொலி திருமண அழைப்பிதழ்’ என்ற பெயரில் அழைப்பிதழ்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிதழ் மற்றும் கவரில் கியூஆர் கோடு அச்சிடப்பட்டுள்ளது. திருமணத்திற்கு செல்போனில் வீடியோகால் மூலம் வாழ்த்து தெரிவித்து ‘கூகுள் பே’ என்ற இணையதளத்தில் மொய் பணத்தை அவர்கள் வங்கிக் கணக்குக்கு நேரடியாக அனுப்பும் அளவில் உள்ளது.

இதுகுறித்து அச்சக உரிமையாளர் சங்கர் கூறியதாவது: கொரோனா தொற்று காரணமாக அச்சகத் தொழில் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளது. இதனால் திருமணம், பிறந்தநாள், காதணி, மஞ்சள் நீராட்டு விழா, கோயில் முக்கிய விழாக்கள் அனைத்தும் தடைபட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் சற்று தளர்வு செய்யப்பட்ட பின் திருமண விழாக்களில் 50 பேர் மட்டுமே கலந்து கொள்ளலாம் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் தற்போது திருமணம் நடத்தும் குடும்பத்தினர் அழைப்பிதழ்கள் அச்சடிக்க அச்சகங்களை நாடி வருகின்றனர். ஆனால் 50 அல்லது 100 அழைப்பிதழ்கள் மட்டுமே அச்சடிக்க ஆர்டர் கொடுக்கின்றனர்‌.

இந்நிலையில், புதிய தொழில்நுட்ப முறையில் நாங்கள் முதன்முறையாக நவீன அழைப்பிதழ்களை தயார் செய்துள்ளோம். அதில், திருமண அழைப்பிதழ் மற்றும் கவரின் முன்பக்கம் கியூஆர் கோடு அச்சிடப்பட்டு உள்ளது. திருமணத்திற்கு வர இயலாதவர்கள் அந்த அழைப்பிதழின் முதல் பக்கத்தை செல்போனில் உள்ள ஸ்கேனர் மூலம் ஸ்கேன் செய்தால் மணமக்களுக்கு நேரடியாக வீடியோ கான்பரன்சில் வாழ்த்துக்களை தெரிவிக்கலாம். மேலும் இதன்மூலம் ‘கூகுள் பே’ ஆப் மூலம் அவர்களின் வங்கிக் கணக்கிற்கு மொய் பணத்தையும் வழங்கிலாம்.

இதுமட்டுமின்றி அழைப்பிதழில் அச்சடிக்கப்பட்ட வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொண்டால் மணமக்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார். இந்த நவீன அழைப்பிதழ்கள் திருப்பத்தூர் கலெக்டர் சிவன்அருள், எஸ்பி விஜயகுமார் ஆகியோரிடம் வழங்கப்பட்டது. அவர்கள், அச்சக தொழிலாளி சங்கரை பாராட்டினர். இந்த நவீன அழைப்பிதழ் பொதுமக்களிடத்திலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.Tags : Videogol , Moi for Brides, Modern Wedding Invitation, Tirupattur
× RELATED ரயிலில் அடிபட்டு ஒருவர் பலி