×

நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டதால் விற்பனையின்றி வீணாகும் பூசணிகாய்கள்: விவசாயிகள் வேதனை

நெல்லை: நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஓட்டல்கள் மூடப்பட்டுள்ளதாலும், திருமணங்கள் பெரியளவில் நடக்காததால் சாம்பார் பூசணிகாய்கள் விற்பனை இன்றி அழுகி வீணாவதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். நெல்லை, தென்காசி மாவட்டங்களில் ஆலங்குளம், பாவூர்சத்திரம், ஆழ்வார்குறிச்சி, கடையம், அம்பாசமுத்திரம், மானூர், இட்டோரி, மூலககரைப்பட்டி, முனைஞ்சிபட்டி, நாங்குநேரி, வள்ளியூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் கத்தரி, வெண்டை, தக்காளி, அவரை, புடலை, தடியங்காய், பூசணிக்காய் உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்துள்ளனர்.

கடந்த ஆண்டு பருவமழை போதிய அளவு பெய்ததால் கிணறு, ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் காய்கறி சாகுபடி பயிர்கள் செழித்து வளர்ந்தது. கத்தரி, தக்காளி, புடலை, சாம்பார் பூசணிகாய்கள் உள்ளிட்ட காய்கள் அதிகளவு விளைந்தது. இந்நிலையில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் 24ம்தேதி மாலை முதல் மே 31ம் தேதிவரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதைதொடர்ந்து அரசு, தனியார் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் உள்ளிட்டவைகள் மூடப்பட்டன.

திருமணம், கோயில் கொடைவிழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் உணவகங்கள், ஓட்டல்கள் மூடப்பட்டதால் காய்கறிகள் விற்பனை முடங்கியது. கத்தரிகாய், தக்காளி, நெல்லி கனி அழுகி வீணாகியது. இதனை கால்நடைகளுககு தீவனமாக விவசாயிகள் வழங்கினர். இதுபோல் அனைத்து ஓட்டல்கள், உணவகங்கள் மூடப்பட்டதால் சாம்பாருக்கு பயன்படும் பூசணிக்காய்கள் விற்பனை இல்லாததால் பறித்து வயல்வெளிகளில் குவித்து வைககப்பட்டுள்ளன. இதனை வாங்க வியாபாரிகள் முன்வராததால் தினமும் கொளுத்தும் கோடை வெயிலில் பூசணிகாய்கள் அழுகி வீணாகின்றன.

இதனால் விவசாயிகள் செலவு செய்த தொகையை கூட எடுக்க முடியாத நிலையில் உள்ளதாக வேதனை தெரிவித்தனர். இதுகுறித்து இட்டேரி ஆலங்குளத்தை சேர்ந்த விவசாயி முத்து கூறுகையில்; இந்த ஆண்டு கத்தரி, தக்காளி, பூசணிக்காய் நல்ல விளைச்சல் காணப்பட்டது. ஊரடங்கு உத்தரவால் ஓட்டல்கள், உணவகங்களில் பயன்படுத்தும் பூசணிகாய்கள் விற்பனை முடங்கியது. இதனால் செடிகளில் பறிக்கப்பட்ட பூசணிகாய்கள் விற்பனை இன்றி அழுகியும், வெயிலில் வெடித்தும் வீணாகிறது. விவசாய பணிகளுக்கு செலவு செய்த காசை கூட எடுக்க முடியாத நிலை தொடர்கிறது என்றார்.

Tags : districts ,Paddy , Paddy, coconut, pumpkins, farmers
× RELATED கேரளாவில் சுட்டெரிக்கும் வெயில்; 11 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை