×

ஏற்றுமதி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மீன்பிடி தடைகாலத்தை குறைத்தாலும் பயனில்லை: மீனவர்கள் கவலை

ராமேஸ்வரம்: தமிழக கடலில் அமலில் உள்ள விசைப்படகுகளுக்கான 60 நாள் மீன்பிடி தடைகாலம், தற்போது 47 நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் ஜூன் 1ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் இறால் மீன்களை ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள், ஊரடங்கால் மூடப்பட்டுள்ள நிலையில், ஜூன் 15ம் தேதி வரை கடலுக்கு செல்ல முடியாது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர். இந்திய கடல் பகுதியில் மீன்கள் இனப்பெருக்கக் காலமான ஏப்.15ம் தேதி முதல் ஜூன் 15ம் தேதி வரை, மீன்பிடி தடைகாலமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்படுகிறது. தடைகாலத்தில் கன்னியாகுமரி முதல் சென்னை வரை மன்னார் வளைகுடா, பாக் ஜலசந்தி மற்றும் வங்கக்கடலில் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல அனுமதியில்லை.

இந்த ஆண்டு கொரோனா ஊரடங்கால் மார்ச் 24ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 21 நாட்கள் விசைப்படகுகள், நாட்டுப்படகுகள் அனைத்தும் கரை நிறுத்தப்பட்டன. முதல் கட்ட ஊரடங்கு முடிந்து நாட்டுப்படகுகள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நிலையில் ஏப்.15 முதல் விசைப்படகுகளுக்கான 60 நாள் மீன்பிடி தடைகாலம் துவங்கியது. இதனால் தொடர்ந்து 81 நாட்கள் விசைப்படகுகள் கடலுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த தடையால் மீனவர்கள், மீன்பிடி தொழில் சார்ந்த இதரவகை தொழிலாளர்கள் என 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் அன்றாட வருவாயை இழந்தனர். மீனவர்களின் நலன் கருதி இந்த ஆண்டு மீன்பிடி தடைகாலத்தை 45 நாட்களாக குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

இதனை ஏற்று 60 நாள் மீன்பிடி தடைக்காலத்தை 47 நாட்களாக குறைத்து மத்திய அரசின் மீன்வளத்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. இந்த ஆண்டு மட்டும் கிழக்கு கரையோர கடல்பகுதிக்கு ஏப்.15ம் தேதி முதல் மே 31ம் தேதி வரையிலான 47 நாட்களை, மீன்பிடி தடைகாலமாக அறிவித்து ஜூன் 1ம் தேதி முதல் விசைப்படகுகள் கடலுக்கு செல்லலாம் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் உத்தரவை தொடர்ந்து தமிழகத்தில் ஜூன் 1ம் தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லலாம் என தமிழக மீன்வளத்துறையும் உத்தரவிட்டுள்ளது. ஆனாலும் இந்த உத்தரவு மீனவர்களுக்கு பயன் தருவதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஏனெனில் இறால், நண்டு உள்ளிட்ட ஏற்றுமதி ரக மீன்களை மொத்தமாக வாங்கி பதப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் அனைத்தும் ஊரடங்கினால் பூட்டப்பட்டுள்ளன.

இந்நிலையில் கடலுக்கு சென்றாலும், இறால் மீன்கள், நண்டுகளை கொள்முதல் செய்து, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதால், மீனவர்களுக்கு பெரும் இழப்பே ஏற்படும் என மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக ராமேஸ்வரம் துறைமுக கடற்கரையில் நேற்று மீனவ பிரதிநிதிகளின் அவசர கூட்டம் நடந்தது. சேசுராஜா, என்.ஜே.போஸ், சகாயம், தேவதாஸ், எமரிட் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில், ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து, இறால் மீன் கொள்முதல் செய்யப்போவதாக தகவல் வரும் வரை, மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என முடிவு செய்யப்பட்டது. விசைப்படகுகளை சீரமைக்கும் பணிகளை தொடரவும், ஏற்றுமதி நிறுவனங்களிடம் இருந்து தகவல் வந்ததும் ஜூன் 15ம் தேதிக்கு மேல் மீன் பிடிக்க கடலுக்கு செல்லவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் ராமேஸ்வரம் முதல் நாகப்பட்டினம் வரையுள்ள விசைப்படகு மீனவர் சங்கங்களும் இதே முடிவை எடுத்துள்ளதாக மீனவர் சங்க பிரதிநிதிகள் போஸ், சேசுராஜா ஆகியோர் தெரிவித்தனர்.

Tags : Fisheries ,export companies ,companies , Export companies, fishing boats, fishermen
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...