×

காடுவெட்டியில் பதற்றம்; குரு மகன், மருமகன்களுக்கு சரமாரி அரிவாள் வெட்டு: பாமகவினருக்கு வலை; போலீஸ் குவிப்பு

ஜெயங்கொண்டம்: காடுவெட்டியில் குரு மகன் மற்றும் மருமகன்களை பாமகவினர் அரிவாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது. இதனால், போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டம், காடுவெட்டி பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் முன்னாள் எம்எல்ஏ  காடுவெட்டி குரு. பாமக கட்சியின் நட்சத்திர பேச்சாளர். ராமதாஸின் வளர்ப்பு பிள்ளை என கூறப்படும் அளவுக்கு பாமகவில் வளர்ந்தார். அவருக்கு என்று ஒரு கூட்டமும் இருந்தது. மேலும், அரியலூர் மாவட்டத்தில் கட்சியை வளர்க்க கடுமையாக உழைத்தார். கடந்த 2016ம் ஆண்டு உடல் நலக்குறைவால் காடுவெட்டு குரு மரணமடைந்தார்.

அதன்பின், குருவின் மகள், குருவின் மனைவியின் உறவினரை காதல் திருமணம் செய்தது. இதற்கு அவர்களது குடும்பத்தில் பல்வேறு எதிர்ப்புகள் கிளம்பியது. அவர்களை ஊருக்கு சேர்க்காமல் ஒதுக்கி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால், அங்கு மோதல் சூழல், பதற்றம் நிலவியது. இதுகுறித்து, குருவின் தாயார் பாமகவினர் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்தார். இதனால், குருவின் குடும்பத்திற்குள் அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், காடுவெட்டியில் நடந்த குருவின் மணிமண்டபம் திறப்பு விழாவுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் வருவதை அப்பகுதியினர் விரும்பவில்லை.

அப்போது, குருவின் மனைவி அளித்த பேட்டியில், பாமகாவிற்காக பாடுபட்ட எனது கணவரை, அவரது மறைவிற்கு பிறகு கண்டுகொள்ளவில்லை. எங்கள் குடும்பத்தை ஒதுக்கி வைப்பதில் குறியாக இருக்கிறது என்று பேட்டியளித்தார்.
இதனால், குருவின் குடும்பத்திற்கும், பாமகவிற்கு இடைவெளி அதிகமான நிலையில், அரியலூர் மாவட்டம் காடுவெட்டியில் குருவின் குடும்பத்திற்கு ஆதரவு அதிகமாக இருந்தது. இதை கட்சி மேலிடம் பொறுத்து கொள்ளமுடியாமல், குருவின் குடும்பத்திற்கும், இடையூறுகள் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், ஜெயங்கொண்டம் தொகுதி காடுவெட்டியில் முன்னாள் எம்எல்ஏ குரு வீடு உள்ளது.

இந்த வீட்டிலிருந்து அவரது ஆதரவாளர் அருண் குமார் என்பவர் நேற்றிரவு வெளியே வந்துள்ளார். அப்போது குரு வீட்டு பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் அருகே வரும்போது பாமக கட்சியில் பொறுப்பில் இருக்கும் சிலர் தடுத்து நிறுத்தி அருண்குமாரை மிரட்டியுள்ளனர். இதுகுறித்து உடனடியாக அவர் வீட்டில் இருந்த குரு மகன் கனலரசனுக்கு தகவல் கொடுத்தார். உடனே கனலரசன் மற்றும் குருவின் மருமகன் மனோஜ், மனோஜின் அண்ணன் மதன் ஆகியோர் அங்கு வந்து அவர்களிடம் விசாரித்தனர். ஆனாலும் அந்த மர்மநபர்கள் கனலரசன், மனோஜ், மதன் ஆகியோரையும் தாக்கியுள்ளனர்.

இதில் மதனுக்கு தலையில் அரிவாள் வெட்டும், மனோஜ்க்கு காலில் அரிவாள் வெட்டும், கனலரசனுக்கு காயமும் ஏற்பட்டது.இவர்கள் மூன்று பேரும் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், இந்த சம்பவத்தை தொடர்ந்து காடுவெட்டி பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால் காடுவெட்டி பகுதியில் பதற்றம் நிலவி வருகிறது.

ராமதாஸ், அன்புமணி எங்கள் குடும்பத்தை அழிக்க முயற்சி
காடுவெட்டி குருவின் தாயார் கூறுகையில், பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகியோர், காடுவெட்டியில் சிலரை வைத்துக்கொண்டு, பணம்கொடுத்து எங்கள் குடும்பத்தை அழிக்க முயற்சிக்கின்றனர் என்று குற்றச்சாட்டியுள்ளார்.



Tags : woods ,son-in-law ,Guru ,Woods in Tension , Kaduvetti, guru's son, son-in-law, cut of the sickle sickle
× RELATED வன்னியர்களின் இடஒதுக்கீட்டுக்கு...