சூலூரில் 2வது தேஜஸ் விமானப்படைப் பிரிவு : விமானப்பட தளபதி பதவ்ரியா தொடங்கி வைத்தார்!!

கோவை : தேஜஸ் போர் விமானங்கள் அடங்கிய 2வது விமானப்படை பிரிவு கோவையை அடுத்த சூலூர் விமானப்படை தளத்தில் தொடங்கப்பட்டுள்ளது. தேஜஸ் முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு இருக்கும் இலகு ரக போர் விமானம் ஆகும். இந்த விமானம் மணிக்கு 2000 கி.மீ. வேகத்தில் பறக்கும் திறன் பெற்றது. மிக் 21 ரக விமானங்களுக்கு மாற்றாக தேஜஸ் தயாரிக்கப்பட்டது. இதில் எதிரிகளின் ஏவுகணைகள் மற்றும் பீரங்கி தாக்குதல்களை துல்லியமாக கண்டறிவதற்கான நவீன சாதனங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

வானில் பறக்கும் போதே எரிபொருள் நிரப்புவதற்கான வசதியும் இணைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த 2018ம் ஆண்டு தேஜஸ் விமானம் சூலூர் விமானப்படைத் தளத்திலும் இணைக்கப்பட்டது. இந்நிலையில் சூலூரில் தேஜஸ் போர் விமானங்கள் அடங்கிய 2வது விமானப்படை பிரிவு இன்று தொடங்கப்பட்டுள்ளது. விமானப்படை தளபதி பதவ்ரியா தேஜஸ் விமானத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

முன்னதாக தேஜஸ் விமானத்திலும் அவர் பயணம் மேற்கொண்டார். டிஆர்டிஓ எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையமும் இந்துஸ்தான் ஏரோனாட்டிகள் நிறுவனமும் இணைந்து தேஜஸ் விமானத்தை தயாரித்துள்ளனர். 2019ம் ஆண்டு பாகிஸ்தானின் பாலக்கோட் பகுதியில் இந்திய விமானப்படை நடத்திய தாக்குதலுக்கு பின்னர், போர் திறனை அதிகரிக்க விமானப்படை தீவிரம் காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>