×

உழவர்சந்தைகள் பழைய இடத்தில் மீண்டும் துவங்கியது பஸ் போக்குவரத்து இல்லாததால் விவசாயிகள் வருகை குறைந்தது: காய்கறி வாங்க வந்த மக்கள் ஏமாற்றம்

ஈரோடு: ஈரோட்டில் உழவர்சந்தைகள் நேற்று முதல் பழைய இடத்தில் மீண்டும் செயல்பட துவங்கியது. பஸ் போக்குவரத்து இல்லாததால் விவசாயிகள் வருகை குறைந்தது. இதனால், காய்கறி வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். ஈரோடு மாநகரில் சம்பத் நகர் பகுதியிலும், பெரியார் நகர் பகுதியிலும் உழவர்சந்தைகள் செயல்பட்டு வந்தன. இதில், மாவட்ட அளவில் சம்பத் நகர் உழவர் சந்தை பெரியது. கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதம் 28ம் தேதி சம்பத் நகர், பெரியார் நகர் உழவர்சந்தைகள் காந்திஜி ரோட்டில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி வளாகத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா தொற்று மாநகராட்சி பகுதியில் கட்டுப்பாட்டிற்குள் உள்ளதால் இந்த இரு உழவர் சந்தைகளும் பழைய இடத்திற்கே இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கலெக்டர் கதிரவன் உத்தரவின்படி, கடந்த 62 நாட்களுக்கு பிறகு மாநகரில் செயல்பட்டு வந்த உழவர்சந்தைகள் மீண்டும் பழைய இடத்திலேயே நேற்று அதிகாலை முதல் செயல்பட துவங்கியது.

முன்னதாக, பெரியார் நகர், சம்பத் நகர் உழவர்சந்தைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்கும் வகையில் 1 மீட்டர் இடைவெளியுடன் மக்கள் நிற்கும் வகையில் வட்டங்கள் வரையப்பட்டிருந்தன. அதேபோல், விவசாயிகளின் கடைகளுக்கு இடையேயும் 3 மீட்டர் இடைவெளி விடப்பட்டிருந்தது. மேலும், விவசாயிகள் முக கவசம் அணிந்தபடியும், மக்கள் கைகளை சுத்தம் செய்த பிறகே உள்ளே அனுமதித்தனர். இதனை ஈரோடு மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன், உதவி ஆணையாளர் விஜயகுமார் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். முதல் நாள் என்பதாலும், பஸ் போக்குவரத்து இல்லாததாலும் இந்த இரு சந்தைகளிலும் விவசாயிகளின் வருகை மிகவும் குறைவாக இருந்தது. இதனால், காய்கறி வாங்க வந்த மக்கள் ஏமாற்றம் அடைந்தனர்.இதுகுறித்து உழவர்சந்தை அதிகாரிகள் கூறியதாவது: சம்பத் நகர் உழவர் சந்தையில் வழக்கமாக 160 கடைகளும், பெரியார் நகர் உழவர் சந்தையில் 38 கடைகளும் அமைக்கப்படும்.

இடம் மாற்றம் செய்யப்பட்ட முதல் நாளான நேற்று சம்பத் நகர் உழவர் சந்தையில் 40 விவசாயிகளும், பெரியார் நகர் உழவர் சந்தையில் 30 விவசாயிகள் என மொத்தமே 70 விவசாயிகள் மட்டுமே கடைகள் அமைத்திருந்தனர். சந்தை அதிகாலை 5 மணி முதல் காலை 9 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பஸ் போக்குவரத்து வசதி இல்லாததால் தொலைதூரத்தில் இருந்து வரும் விவசாயிகள் ஏராளமானோர் வரவில்லை. பஸ் வசதி இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே உழவர் சந்தையில் வழக்கம்போல் அனைத்து விவசாயிகளும் வருவார்கள். அதுவரை இதே நிலைதான் நீடிக்கும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : re-emergence , Farmers' turnaround,lack , bus transport, disappointment,people, vegetables
× RELATED அத்துமீறி ரோந்து பணியில் ஈடுபடும் சீன...