×

தர்மபுரியில் அறுவடை தாமதத்தால் செடியிலேயே பழுத்து அழுகும் குடைமிளகாய்: நிவாரணம் வழங்க கோரிக்கை

தர்மபுரி:  தர்மபுரியில், அறுவடை தாமதத்தால் குடைமிளகாய் செடியிலேயே பழுத்து தொங்குவதால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் திண்டல் பகுதியில் பரவலாக குடை மிளகாய் சாகுபடி செய்துள்ளனர். இப்பகுதியில் அறுவடை செய்யப்படும் குடைமிளகாய்களை சென்னை, சேலம், கோயம்புத்தூர் மற்றும் பெங்களூரு உள்ளிட்ட இடங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைத்து வருகின்றனர். இந்நிலையில், ஊரடங்கு உத்தரவால் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், குடைமிளகாய்களை பறிக்க வழியின்றி செடிகளிலேயே பழுத்து வீணாகும் நிலை காணப்படுகிறது. எனவே, அரசு நிவாரணம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து உச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த குடைமிளகாய் விவசாயி வடிவேல்(56) என்பவர் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: வங்கி மற்றும் தனிநபரிடம் கடன் வாங்கி, ஒரு ஏக்கரில் குடைமிளகாய் பயிரிட்டேன். பசுமை குடில் அமைத்து சாகுபடி செய்திருந்தேன். வடமாநில சந்தையை எதிர்பார்த்து குடைமிளகாய் சாகுபடி செய்திருந்த நிலையில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. அதன் காரணமாக குடைமிளகாய் அறுவடை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், செடிகளிலேயே பழுத்து வீணாகி வருவதால் பல லட்சம் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. எனவே, வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொழில் நஷ்டத்தை ஈடு செய்யும் வகையில், அரசின் நிவாரண உதவி பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Tags : Dharmapuri , Demand,relief,delay,harvest,Dharmapuri
× RELATED கற்கள் கடத்த முயன்ற டிராக்டர் பறிமுதல்