×

காரைக்குடியில் வீட்டிற்குள் நுழைந்து குரங்குகள் அட்டகாசம்: விரட்டி கடிப்பதால் பொதுமக்கள் அச்சம்

காரைக்குடி: காரைக்குடியில் நாளுக்கு நாள் குரங்கு தொல்லை அதிகரித்து வருகிறது. ஜன்னல் மற்றும் கதவு வழியாக வீட்டுக்குள்  நுழைந்து பொருட்களை சூறையாடுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். காரைக்குடி நகராட்சிக்கு உட்பட்ட செக்காலை வீதிகள், வாட்டர் டேங்க், சுப்பிரமணியபுரம் மற்றும் சங்கராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பர்மாகாலனி பகுதியில் குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இப்பகுதிகளில் உள்ள மரங்கள் மற்றும் சாலைகளில் ஹாயாக குரங்குகள் உலா வருகின்றன. இங்குள்ள வீடுகளின் மேல்தளத்தில் கூட்டமாக முகாமிடும் குரங்குகள் அங்கு பயன்பாட்டிற்கு வைத்திருக்கும் பைப்பை திறந்துவிட்டு தண்ணீர் குடிக்கின்றன. பின்னர் வாட்டர் டேங்குகளில் உள்ளே குதித்து குளிப்பது,  அதிரடியாக வீட்டிற்குள்  நுழைந்து உணவு பொருட்களை சூறையாடுவதோடு விரட்ட வருபவர்களை விரட்டி கடிக்க வருகின்றன. குரங்குகள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் பயத்துடன் வீட்டிற்குள் இருக்க வேண்டிய நிலை உள்ளது என புகார் தெரிவித்துள்ளனர்.

செக்காலை மணி  கூறுகையில், குரங்கு தொல்லையால் வீட்டிற்குள் இருக்கவே பயமாக உள்ளது. 10க்கும் மேற்பட்ட குரங்குகள் வீட்டின் மொட்டைமாடியில் முகாமிட்டு அமர்ந்து கொள்கின்றன. இதனால் துணி காயப்போட மேலே செல்லவே பயமாக உள்ளது. தவிர அருகே உள்ள வீடுகளில் இருந்து பொருட்களை எடுத்துக் கொண்டுவந்து அடுத்த வீட்டில் தூக்கி போட்டுவிட்டு செல்கிறது. அவர்கள் வந்து கேட்கும் போது பொருட்கள் இல்லை என கூறினால் நம்பாமல் செல்கின்றனர். இதனால் இருவீட்டாருக்கும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. தவிர தண்ணீர் பைப்புகளை திறந்துவிடுவது, வீட்டிற்குள் எங்காவது ஒளிந்து கொள்வது என பல்வேறு அட்டகாசம் செய்கின்றன என்றார்.

நோய் பரவும் அபாயம்
இது குறித்து மருத்துவர்  கூறுகையில், குரங்குகளுக்கு ரேபிஸ் நோய் இருக்கும் பட்சத்தில் அது நம்மை கடித்தால் அந்நோய் நம்மை பாதிக்கும் அபாயம் உள்ளது. தவிர அவைகளுக்கு மனிதர்களை போல் டெங்கு உள்பட பல்வேறு வைரஸ் மூலம் பரவக்கூடிய காய்ச்சல் வரும். அந்நோய்கள் குரங்குகள் மூலம் நமக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ரத்தகசிவுடன் கூடிய மூலக்காய்ச்சல் பரவுவாய்ப்புள்ளது. குரங்குகள் குளித்த டேங்க் நீரை நாம் பயன்படுத்துவதால் தண்ணீர் மூலம் பரவக்கூடிய வயிற்றுபோக்கு, வாந்தி மற்றும் புட் பாய்சன் வரவாய்ப்புள்ளது.  குரங்கு கூட்டத்தில் இருக்கும் ஆண் குரங்குதான் அனைத்தையும் வழிகாட்டி அழைத்து செல்லும்.  தங்களுக்கு பாதுகாப்பான இடத்தையும் இதுதான் தேர்வு செய்யும்.  வனத்துறையினர் கண்காணித்து ஆண் குரங்கை பிடித்தால் மற்றவை தானாக சென்றுவிடும். ஆனால் இதுபோன்று செய்யாததால் மீண்டும், மீண்டும் வருகிறது.  இவைகளுக்கு உணவாக கூடிய அத்தி, அரசு, ஆலம் போன்ற மரங்களை ஊருக்கு வெளியே நட வேண்டும். அப்போது இவைகள் உணவு தேவைக்காக ஊருக்குள் வராது என்றார்.


Tags : house ,Karaikudi , Monkeys break , house , Karaikudi,public fear
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்