×

மயிலாடும்பாறை அருகே பாதியில் நிற்கும் பாலம் கட்டுமானப் பணி: போக்குவரத்துக்கு பொதுமக்கள் அவதி

வருசநாடு: மயிலாடும்பாறை அருகே, அரைகுறையாக நிற்கும் பாலப்பணியால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு அவதிப்படுகின்றனர். தேனி மாவட்டம், மயிலாடும்பாறை அருகே கருப்பையாபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் பெரிய ஓடை செல்கிறது. இந்த ஓடையை கடந்துதான் விவசாய நிலங்களுக்கும், வெளியூர்களுக்கும் பொதுமக்கள் சென்று வருகின்றனர். இந்நிலையில் மழை காலங்களில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்போது வாகனம் மற்றும் பொதுமக்களின் போக்குவரத்து பாதிக்கப்படும். இதனால், ஓடையின் குறுக்கே பாலம் கட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையேற்று ரூ.3 கோடியில் ஓடையின் குறுக்கே பாலம் கட்டும் பணி தொடங்கியது. கட்டுமானப் பணி முடிந்த நிலையில், பாலத்தின் இணைப்பு பகுதியில் டந்த 6 மாதமாக கிராவல் மண் குவித்து சமப்படுத்தாமல் உள்ளனர். இதனால், பொதுமக்கள் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடியவில்லை.

இது குறித்து சம்மந்தப்பட்ட ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. விவசாய நிலங்களுக்கு செல்லும் விவசாயிகள் சுற்றிச் செல்கின்றனர். மழை காலங்களில் பொதுமக்கள் செல்ல முடியாத நிலை ஏற்படும். எனவே, இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கைம் எடுக்க வேண்டும்.  இல்லையெனில் கிராம மக்கள் ரேஷன் மற்றும் ஆதார் அட்டைகளை கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைக்கும் போராட்டம் நடத்துவோம் என தெரிவித்துள்ளனர். இது குறித்து கிராமவாசி கருப்பையா கூறுகையில், ‘கிராமத்திலிருந்து 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாகனங்கள் மூலம் சென்று வருகின்றன. போக்குவரத்துக்காக கட்டப்பட்ட பாலம் இன்னும் முழுமையடையாமல் உள்ளது. பாலத்தின் இணைப்பு பகுதியில் கிராவல் மண்ணை போட்டு சமப்படுத்தாமல் உள்ளனர். இது குறித்து அரசு அதிகாரிகளிடம், ஒப்பந்ததாரரிடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. எனவே, கலெக்டர் அலுவலகத்தில் புகார் கொடுக்க உள்ளோம்’ என்றார்.

Tags : bridge ,Mayiladuthurai ,disruption , Construction , halfway bridge, Mayiladuthurai, Public disruption to traffic
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...