×

மதுரை மாவட்ட குடிநீருக்காக திறக்கப்பட்ட வைகை அணை தண்ணீர் அணைப்பட்டி வந்தடைந்தது: பொதுமக்கள் மகிழ்ச்சி

வத்தலக்குண்டு: மதுரை மாவட்ட மக்களின் குடிநீருக்காக திறக்கப்பட்ட வைகை அணை தண்ணீர் நிலக்கோட்டை அருகே அணைப்பட்டிக்கு வந்தடைந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 41.88 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் அணையில் இருந்து திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட கூட்டுக்குடிநீர் திட்டங்களுக்காக மட்டும் வினாடிக்கு 72 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகளில் தண்ணீர் இன்றி வறண்டு காணப்படுதால் வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று மதுரை மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்ற தமிழக அரசு வைகை அணையில் இருந்து 3 நாட்கள் தண்ணீர் திறக்க உத்தரவிட்டது. அதன்படி நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு அணையில் இருந்து வினாடிக்கு 1500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது.

முதல் நாளான நேற்று முன்தினம் வினாடிக்கு 1500 கனஅடியும், இரண்டாவது நாளில் (நேற்று) 850 கனஅடியாக குறைக்கப்பட்டு, 3வது நாளி்ல் (நாளை) 300 கனஅடியாக குறைக்கப்பட்டு வரும் மே 28ம் தேதி மாலை 6 மணியுடன் தண்ணீர் திறப்பது நிறுத்தப்படும். நேற்று முன்தினம் திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று நிலக்கோட்டை அருகே அணைபட்டி பகுதிக்கு வந்து சேர்ந்தது. இந்த 3 நாட்களில் வைகை அணையில் இருந்து மொத்தம் 216 மில்லியன் கனஅடி தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்பட உள்ளது என்றும், இதன்மூலம் திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் வைகை ஆற்றில் உள்ள ஆயிரக்கணக்கான குடிநீர் உறைகிணறுகளில் நீர்மட்டம் பெருகும் என்றும் பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். வைகை தண்ணீர் அணைப்பட்டி வந்ததால் நிலக்கோட்டை பகுதியின் உறைகிணறு நீர்மட்டம் உயர்ந்து கோடை காலத்தில் குடிநீர் தங்கு தடையின்றி கிடைக்கும். இதனால் இப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Tags : Vaigai Dam ,dam ,Madurai district ,district , Vaigai dam , drinking water , Madurai district
× RELATED வைகை அணையில் தண்ணீர் திறப்பு குறைப்பு