×

ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்கப் போவது யார்?: இன்று தீர்ப்பு வழங்குகிறது ஐகோர்ட்

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்கிறது.  மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்ளிட்ட ரூ. 913 கோடி மதிப்பிலான  சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகி ஒருவரை நியமிக்கக் கோரி அதிமுகவைச் சேர்ந்த புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் கடந்தாண்டு ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.  இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா மற்றும் அவரது தம்பி  ஜெ.தீபக் ஆகியோரும் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்களும் நேரில் ஆஜராகி நீதிமன்றத்தில் விளக்கம் அளித்திருந்தனர். மேலும் தங்களை  ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகளாக  அறிவிக்கக் கோரி தீபாவும், தீபக்கும் தனியாக மனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.  வழக்கு விசாரணையின் போது,  ஜெயலலிதா செலுத்த வேண்டிய ரூ.40 கோடி வருமான வரி பாக்கிக்காக அவர் வசித்த போயஸ் கார்டன் இல்லம் மற்றும் நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ள சில சொத்துக்களை முடக்கி வைத்திருப்பதாக வருமான வரித்துறையும் பதில் மனு தாக்கல் செய்திருந்தது.

 இந்த வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் ஏற்கனவே நிறைவடைந்த நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தனர்.   இந்நிலையில், ஜெயலலிதா சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்கக் கோரி புகழேந்தி உள்ளிட்ட இருவர் தொடர்ந்த வழக்கிலும், அதேபோல தங்களை ஜெயலலிதாவின் வாரிசு என அறிவிக்கக்கோரி ஜெ.தீபா, ஜெ.தீபக் ஆகியோர் தொடர்ந்த மனுக்கள் மீதும் நீதிபதிகள் இன்று காலை  தீர்ப்பளிக்கவுள்ளனர். ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லமான வேதா நிலையத்தை அரசுடமையாக்கி அதை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற அரசிதழில் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் இன்று உயர் நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு அதிமுகவினரிடையும், தமிழக மக்களிடமும் பரபரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.


Tags : Jayalalithaa , Jayalalithaa, assets, HC
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...