×

கொரோனா அதிகரித்து வரும் நிலையில் மழைக்காலத்தில் பரவ தயாராகும் காய்ச்சல்களில் இருந்து தற்காப்பது எப்படி?: டாக்டர் விளக்கம்

கொரோனா அதிகரித்து வரும் நிலையில்மழைக்காலத்தில் பரவ தயாராகும் காய்ச்சல்களில் இருந்து தற்காப்பது எப்படி? என்று டாக்டர் சுதர்சன் கூறியதாவது: கொரோனா என்ற ஒற்றை சொல் உலகத்தையே புரட்டி போட்டுள்ளது. தமிழகத்திலும் அதன் தாக்கம் நாள் ஒன்றுக்கு 500க்கும் மேற்பட்டவர்களை தொற்றி வருகிறது. இந்தநிலையில் ஜூன் மாத இறுதியில் மழைக்காலம் தொடங்க உள்ளது. தற்போதே பல மாநிலங்களிலும், தமிழகத்தின் தெற்கு மற்றும் மேற்கு  மாவட்டங்களிலும் மழை தொடங்கி உள்ளது. எனவே மழைகாலத்தில் கொரோனா பரவலுக்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால். மக்கள் முன்னரே தயாராக வேண்டும். கைகளை சுத்தமாக வைத்து கொள்ளுதல், கொதிக்க வைத்த நீரை பருகுதல், மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி, பயணங்களை தவிர்ப்பது என பல்வேறு முன் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

குறிப்பாக மழைக்காலத்தில் எலி காய்ச்சல் பரவும், குப்பைகள் அதிகம் இருக்கும் இடத்தில் இருந்து, எலிகளின் சிறுநீர் மூலம், எலி காய்ச்சல் எளிதில் பரவும், இதேபோல் டைப்பய்டு, டெங்கு, நிமோனியா காய்ச்சல்களும் மழை காலத்தில்  பரவும். இது நமக்கு காலநிலைகளுக்கு ஏற்ப வருவது தான். இருந்தாலும் கொரோனா காலத்தில் வருவதால் சற்று ஆபத்தானது. அதிலும் நிமோனியா காய்ச்சல் முழுக்க முழுக்க நுரையீரலில் ஏற்படக்கூடியது. பாக்ட்டிரியாவால் சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா உள்ளவர்களுக்கெல்லாம், மழை காலத்தில் நிமோனியா காய்ச்சல் ஏற்படும். கொரோனா நுரையீரலை தாக்குவதாலும், நிமோனியாவும் நுரையீரலை தாக்குவதாலும், பாதிப்பு அதிகமாக இருக்கும்.

எனவே ஜூன், ஜூலை மாதங்களில், நிமோனியா காய்ச்சலுக்கான தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும். முக்கியமாக வயதானவர்கள், போட்டுக்கொள்ள வேண்டும். இதனால், கொரோனா வந்தாலும், அதற்கான பாதிப்பில் இருந்து தப்பிப்பது எளிது. நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பொதுவாக ஒரு நோய் ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு தொற்றும் என்று அளவு உள்ளது. அம்மை நோய்கள் 5 பேர் வரை தொற்றும், இதேபோல் கொரோனா ஒருவருக்கு வந்தால், அவரிடம் இருந்து மூன்று பேர் வரை பரவும் என்று கூறப்படுகிறது. மழைக்காலத்தில், அதிக காய்ச்சல், இருமல், உள்ளிட்ட அறிகுறிகள் இருந்தால் உடனே அது கொரோனா என்று நினைத்து மருத்துவமனைக்கு சென்றுவிட வேண்டாம். 3 நாட்கள் வரை காத்திருக்கலாம்.

நல்ல உணவுகளை  எடுத்துக்கொள்ள வேண்டும். விட்டமின் சி மாத்திரைகளை 2 வேளை எடுத்துக்கொள்ளலாம், விட்டமின் ஜிங்க் எடுக்கலாம், நல்ல புரத உணவுகளை எடுக்க வேண்டும். இப்படி இருக்கையில் சாதாரண காய்ச்சல், சளி என்றால் தானாகவே போய்விடும். முட்டை சாப்பிடலாம் அதில் 13 சதவீதம் புரோட்டீன் உள்ளது. ஒருவர் எடை அளவு புரோட்டீன் எடுத்துக்கொள்ள வேண்டும். இப்படி இருக்கையில் மழைக்கால காய்ச்சல்களில் இருந்து தப்பித்து, கொரோனாவில் இருந்தும் காத்துகொள்ளலாம்.

வலி மருந்துகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏன்னென்றால் வலி மாத்திரைகள் எடுப்பவர்களுக்கு கொரோனா வந்தால் ஆபத்து ஏற்படுவதாக இத்தாலியில் நடந்த ஆராய்ச்சியில் தெரிய வந்துள்ளது. வயதானவர்கள் வெளியே செல்லாமல், பாதுகாப்பாக இருக்க வேண்டும். எனவே மழைக்காலத்தில் வரும் காய்ச்சல்களை, கொரோனா என்று நினைத்து அச்சமடைய தேவையில்லை. வீட்டிலேயே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம். அதிகமானால் மட்டுமே மருத்துவரிடம் செல்லலாம். எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வேண்டும். அப்படி அதிகரித்தால் கொரோனா வந்தால் ஒன்னும் ஆகாது. இவ்வாறு கூறினார்.

Tags : Coronary Rise , Corona, rain, doctor's description
× RELATED மெட்ரோ ரயில் பணிக்காக குழாய்கள்...