×

‘அறிந்து கொள்ளுங்கள்’ கையேடு வெளியிட அரசு திட்டம் கொரோனா வைரஸ் பற்றி முழுசா தெரியணுமா?: சத்தான உணவாக எதை சாப்பிடலாம்

சென்னை: கொரோனா வைரஸ் என்ற கோவிட் - 19 நோயின் அறிகுறிகள், தடுப்பு நடவடிக்கைகள், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தல், வீட்டு கண்காணிப்பு மற்றும் தனிமைப்படுத்துதல் பரிசோதனை முறை குறித்து அறிந்து கொள்ளுங்கள் என்ற தலைப்பில் கையேடுகளை தயாரித்து மக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் என்றால் என்ன? வேகமாக பரவக்கூடிய ஒரு தொற்று காய்ச்சல், வறட்டு இருமல், சளி, மூச்சுத் திணறல் இதனுடன் உடல்சோர்வு, தலைவலி, நாக்கில் சுவை இழப்பு, மூக்கில் நுகர்வு தன்மை இழப்பு ஏற்படும்.

மேலும்  இருமல் மற்றும் தும்மல் வரும்போது வெளிப்படும் நீர்த்திவலைகள் படிந்துள்ள பொருட்களை தொடும்ேபாது கைகள் மூலமாக மற்றவர்களுக்கு பரவுகிறது. ஒருவர் மூலம் ஒரு மாதத்தில் 40 பேருக்கு நோய் தொற்று பரவும். இதை தடுக்க அடிக்கடி கைகளை சோப்பு போட்டு நன்கு தேய்த்து கழுவவேண்டும், இரண்டு மணி நேரத்துக்கு ஒரு முறை எந்த பணியாக இருந்தாலும் கை கழுவ வேண்டும். நோய் அறிகுறி உள்ளவர்களை கவனித்துக் கொள்ளும்போது, இருமும் போதும், தும்மும் போதும், வாய் மற்றும் மூக்கை கைக்குட்டை கொண்டு மூடி கொள்ளவேண்டும், கண், மூக்கு, வாயை தொடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டிற்கு வெளியே 3 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். தினம் 1 லிட்டர் தண்ணீரில் 10 மிலி பிளீச்சிங் பவுடர் கலந்து தரையை சுத்தம் செய்ய வேண்டும்.

எதிர்ப்பு சக்தி வளர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க நடைபயிற்சி, உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் பழங்கள், காய்கறிகள் சேர்த்துக் கொள்ள வேண்டும், பால், மோர், இளநீர் அருந்தலாம், நீராவி பிடிக்கலாம், மிதமான சூடான பாலில் சிறிதளவு மஞ்சள், மிளகு, பனங்கற்கண்டு சேர்த்து பருகலாம். இருப்பிடத்திலேயே தினமும் 15-20 நிமிடங்கள் சூரிய ஒளியில் நிற்கவும் (காலை 10 மணிக்குள், மாலை 4 மணிக்கு பிறகு), ஒரு நாளைக்கு 2 முதல் 3 முறை வெதுவெதுப்பான நீரில் கல் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து தொண்டையில் படுமாறு வாய் கொப்பளிக்க வேண்டும்.

சுக்கு, திப்பிலி, ஆடதோடா போன்ற 15 மூலிகைகள் கொண்ட கபசுர குடிநீர் அருந்தலாம். ஒரு தேக்கரண்டி கபசுர பொடியுடன் 240 மி.லி. தண்ணீர் சேர்த்து நன்றாக கொதிக்க வைத்து, அது 60 மி.லி. அளவு சுண்டியவுடன் நாள் ஒன்றுக்கு ஒரு வேளை உணவுக்கு முன் (குழந்தைகளுக்கு 30 மி.லி. பெரியவர்களுக்கு 60 மி.லி.) அருந்த வேண்டும். அதோடு, மருத்துவரின் ஆலோசனை படி வைட்டமின் மாத்திரைகள் மற்றும் சிங்க் மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம். நாள்பட்ட நோய் உள்ளவர்கள் வீட்டில் வயதானோர், கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள், நாள்பட்ட வியாதி உடையோர் வெளியே போகாமல் தனியாக இருக்க வேண்டும்.

சோதனை எப்படி
கொரோனா சோதனை மூலம் வாய், மூக்கு வழியாக தொண்டையில் சளி மாதிரிகள் எடுத்து கொரோனா வைரஸ் கிருமி தொற்று பரிசோதிக்க வேண்டும். பரிசோதனை முடிவு ஓரிரு நாட்களில் தெரியவரும் தொற்று இல்லை என்றாலும் தொடர்ந்து தங்களை 7 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொண்டு நோய் அறிகுறிகள் தெறிகிறதா என்று கண்காணிக்க வேண்டும்.

மனநலம் முக்கியம்
குணமானவர்கள் மனதிற்கு பிடித்தமான புத்தகங்களை படியுங்கள், இதமான இசையைக் கேளுங்கள். தியானம், யோகா, உடற்பயிற்சி, முழு ஓய்வு, இசைக்கருவிகள் மீட்டுதல் மன அழுத்தத்தை குறைக்கும். இணையதளத்தில் மனதிற்கு அதிக அழுத்தம் தரும் எந்த தேடல்களையும் தவிருங்கள். இதுபோன்ற பல்வேறு தகவல் கொண்ட கையேட்டை மக்கள் தொகை அதிகம் உள்ள மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் உள்ள மக்களுக்கு விநியோகம் செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.


Tags : Government , Be aware, corona virus, nutritious food
× RELATED வெளிநாடுகளில் சிக்கியுள்ள 27,956...