அதிகரிக்கும் கொரோனா 5 மாநிலங்களுடன் அவசர ஆலோசனை

புதுடெல்லி: ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் கடந்த 3 வாரமாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது தொடர்பாக 5 மாநில அரசுகளுடன் மத்திய சுகாதார செயலாளர் அவசர ஆலோசனை நடத்தி உள்ளார். கொரோனா பாதிப்பால் நீட்டிக்கப்பட்ட 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டன. குறிப்பாக, மாநில அரசுகளின் பரஸ்பர சம்மதத்துடன் பொதுமக்கள் இடம் பெயர அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வருகிறது.இந்நிலையில், கடந்த 3 வாரங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்த உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், சட்டீஸ்கர், மத்திய பிரதேச மாநில அரசுகளுடன் மத்திய சுகாதாரத் துறை நேற்று அவசர ஆலோசனை நடத்தியது. 5 மாநில அரசின் தலைமை செயலாளர்களுடன், மத்திய சுகாதார செயலர் ப்ரீத்தி சுடான் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசித்தார். அப்போது, மாநிலத்தின் இறப்பு விகிதம், பாதிப்பு இரட்டிப்பு விகிதம், பரிசோதனை அளவீடு, நோய் தொற்று உறுதிபடுத்தப்படுவோர் சதவீதம் குறித்து அந்த மாநில அரசுகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட சுகாதார செயலர், சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் மூலம் வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு, சோதனை, தடமறிதல் மற்றும் பயனுள்ள மருத்துவ மேலாண்மை போன்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்த வலியுறுத்தி உள்ளார். தனிமைப்படுத்தப்பட்ட மையங்கள், ஐசியு, வென்டிலேட்டர் மற்றும் ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ள மருத்துவமனைகள் ஆகிய சுகாதார கட்டமைப்பை மதிப்பீடு செய்யவும், அடுத்த 2 மாதத்திற்கான தேவையை கருத்தில் கொண்டு அவற்றின் கட்டமைப்பை வலுப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கோவிட்-19 அல்லாத காசநோய், நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் போன்ற சிகிச்சைகளும் தடையின்றி மக்களுக்கு கிடைப்பதை உறுதி செய்யவும் சுகாதார செயலர் உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>