×

சேரும் இடத்திற்கு உத்தரவாதம் இல்லீங்கோ! தடம் மாறும் சிறப்பு ரயில்கள்: குஜராத் போக வேண்டியது கர்நாடகா போகுது

புதுடெல்லி: வெளி மாநில தொழிலாளர்களுக்காக இயக்கப்படும் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள், இஷ்டத்திற்கு தடம் மாறிப் போவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. வெளி மாநில தொழிலாளர்களுக்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களை ரயில்வே துறை இயக்கியது. தற்போது நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் நாடு முழுவதும் இயக்கப்படுகின்றன. ஒவ்வொரு ரயிலிலும் 1200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பி வருகின்றனர்.இந்நிலையில், இந்த ரயில்களில் சில தடம் மாறி, வழிமாறி வேறு ஊருக்கு செல்வதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த 16ம் தேதி குஜராத்தின் சூரத்தில் இருந்து 1,200 தொழிலாளர்களுடன் புறப்பட்ட ரயில், மே 18ம் தேதி வடக்கு பீகாரின் சாப்ரா பகுதியை சென்றடைய வேண்டும். ஆனால், அதற்கு பதிலாக பெங்களூருவில் சென்று நின்றிருக்கிறதாம். தகவலறிந்த அதிகாரிகள், அவசர அவசரமாக மாற்ற ஏற்பாடு செய்து நேற்று முன்தினம் அப்பயணிகளை சாப்ராவுக்கு அனுப்பி வைத்துள்ளனர்.பெங்களூருவில் ஒரு வாரகாலம் அந்த பயணிகள் இருக்க இடமின்றி, கொளுத்தும் வெயிலில் படாதபாடு பட்டுள்ளனர். அதே போல், மற்றொரு ரயில் சாப்ரா செல்வதற்கு பதிலாக ஒடிசாவின் ரூர்கேலா சென்றுள்ளதாம்.

பீகாரின் பாட்னா செல்ல வேண்டிய 2 ரயில்கள் மேற்கு வங்கத்தின் புரிலியாவுக்கும், பீகாரின் கயாவுக்கும் சென்றடைந்து உள்ளதாம். இத்தகவல்களை ரயில்வே அதிகாரிகள் மறுத்துள்ள போதிலும் ரயில்வே வட்டாரத் தகவல்கள் இவற்றை உறுதி செய்கின்றன. பெயர் கூற விரும்பாத சில அதிகாரிகள் கூறுகையில், ‘‘சூரத்தில் இருந்து பீகார் நோக்கி புறப்பட்ட ரயில் (எண்: 0912791) மகாராஷ்டிராவின் புஷாவால் பகுதியில் தண்டவாளம் மாறி உள்ளது. அலகாபாத் வழியாக சாப்ராவை அடைய வேண்டிய அந்த ரயில் பெங்களூருக்கு சென்று விட்டது. இதே போல் தான் மற்ற ரயில்களும் தடம் மாறி வேறு ஊர்களுக்கு சென்று விட்டன. ஷ்ராமிக் ரயில்களை பொறுத்த வரையில் மாநில அரசுகளின் கோரிக்கைக்கிணங்க இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலை பொறுத்த வரையில் புறப்பட்ட இடத்திலிருந்து சென்றடையும் இடம்தான் பிரதானம். மற்றபடி பயணப் பாதைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை. பல சமயங்களில் மாற்றுப் பாதைகளில் இந்த ரயில்கள் இயக்கப்படுவதால் பயணிகள், நடுவழியில் வரும் ஊர்களைப் பற்றி கவனிப்பதில்லை. எனவேதான் கடைசி வரை தவறான ஊருக்கு செல்வதை அறியாமலேயே பயணிகள் இருந்துள்ளனர்,’’ என்றனர்.
ஆனால், அரசு தரப்பில் இந்த விவகாரம் பற்றி எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

விமானத்திலும் குழப்பம்
இரண்டு மாதங்களுக்குப் பிறகு உள்நாட்டு விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதிலும் கூட சில குழப்பமான தகவல்கள் நிலவுகின்றன. கடந்த 25ம் தேதி விமான சேவை தொடங்கப்பட்ட நிலையில், அன்றைய இரவு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி தனது டிவிட்டர் பதிவில், ‘முதல் நாளான இன்று 532 விமானங்கள் இயக்கப்பட்டு, அதில் 39,231 பயணிகள் பயணம் செய்தனர்,’ என புள்ளி விவரங்களை வெளியிட்டிருந்தார். அதனை நேற்று திடீரென திருத்தி வெளியிட்ட அவர், ‘முதல் நாளில் 832 விமானங்கள் இயக்கப்பட்டு, 58,318 பயணிகள் பயணம் செய்துள்ளனர்,’ என கூறி உள்ளார். சம்பந்தப்பட்ட துறையின் மத்திய அமைச்சருக்கே குழப்பமான புள்ளி விவரங்கள் கிடைப்பது விமர்சனத்திற்குள்ளாகி உள்ளது.

Tags : Gujarat ,Karnataka , Special trains. Gujarat.Karnataka, Corona, Curfew
× RELATED ரோட்ஷோவில் கூடிய கூட்டத்தால் நல்ல...