×

தூய்மை பணியாளர் சரமாரி வெட்டி கொலை: 3 பேர் கைது; இருவருக்கு வலை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த வல்லம் கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன். இவரது மகன் கருணாகரன் (35). வல்லம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி அலமேலு. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு கருணாகரன், தனது நண்பர்கள் 5 பேருடன், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலை பச்சையம்மன் கோயில் அருகே மது அருந்தியதாக கூறப்படுகிறது. அப்போது திடீரென நண்பர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த 5 பேர், கருணாகரனை சரமாரியாக கத்தியால் வெட்டினர். ரத்த வெள்ளத்தில் அலறி துடித்த அவர், சம்பவ இடத்திலேயே இறந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். அதற்குள், 5 பேர் தப்பிவிட்டனர். கருணாகரன் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து செங்கல்பட்டு டிஎஸ்பி கந்தன், டவுன் இன்ஸ்பெக்டர் அந்தோணி ஸ்டாலின் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துமவனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

இதற்கிடையில் தனிப்படை போலீசார், சம்பவ இடத்தின் அருகே உள்ள மலைப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு பதுங்கியிருந்த 3 பேரை பிடித்து காவல் நிலையம் கொண்டு சென்று விசாரித்தனர். அதில், செங்கல்பட்டு உசேன் (25), சுரேஷ் (26), பீட்டர் (26) என தெரிந்தது. அவர்கள் மீது கொலை, கொலை முயற்சி, ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்பட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன என தெரிந்தது.மேலும் விசாரணையில், நண்பர்கள் 5 பேர், ஏற்கனவே பணம் வசூலித்து மது வாங்கி குடித்துள்ளனர். போதை ஏறவில்லை. அதனால் மீண்டும் 2,500 வசூலித்து, அதனை மதுவாங்கி வரும்படி கருணாகரனிடம் கொடுத்து அனுப்பினர். அவர் பைக்கில் வேகமாக சென்றபோது, பணத்தை தொலைத்து விட்டு, மதுபானம் வாங்காமல் திரும்பி வந்துள்ளார். இதனால் அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டு, ஆத்திரத்தில், 5 பேரும், கருணாகரனை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர் என கூறியதாக போலீசார் ரிவித்தனர்.தொடர்ந்து போலீசார் தலைமறைவாக உள்ள 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கூடுதலாக டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. அன்றைய தினமே, மது அருந்திய போதையில் வாலிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Sanitation worker ,cleanup worker , Cleanup worker, cut and killed, 3 arrested
× RELATED திருநெல்வேலியில் சாலை விபத்தில்...