×

வேடந்தாங்கல் சரணாலயத்தை ஒட்டியுள்ள மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிக்க முயற்சி: வனத்துறையினரை பொதுமக்கள் முற்றுகை

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே வேடந்தாங்கல் கிராமத்தில், வனத்துறை கட்டுப்பாட்டில்  பறவைகள் சரணாலயம் உள்ளது. இந்த சரணாலயத்தை ஒட்டியே வேடந்தாங்கல் கிராமம் உள்ளது. இங்கு 1000க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். அவர்கள், விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழிலை செய்கின்றனர். இதையொட்டி, இவர்களது ஆடு, மாடுகள் வேடந்தாங்கல் சரணாலயம் அமைந்துள்ள ஏரியை அடுத்த மேய்க்கால் புறம்போக்கு நிலங்களில் மேய்ச்சலுக்கு சென்று வருவது வழக்கம். சுமார் 20 ஏக்கர் பரப்பளவு கொண்ட, நிலத்தை வனத்துறையினர் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் நோக்கில் அதனை ஆக்கிரமிப்பு செய்ய முடிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், மதுராந்தகம் போலீசாரின் பாதுகாப்போடு, ஏரியை ஒட்டியுள்ள குறிப்பிட்ட பகுதியில் காம்பவுண்டு அமைக்கும் பணியில் வனத்துறையினர் நேற்று ஈடுபட்டனர்.இதையறிந்ததும், வேடந்தாங்கல் கிராம மக்கள் அங்கு சென்று, வனத்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனர். அப்போது, இந்த நிலம் மேய்க்கால் புறம்போக்கு நிலம். குறிப்பாக ஆடு, மாடுகள் மேய்வதற்கான இடமாக  உள்ளது. இதனை ஆக்கிரமிப்பு செய்தால் எங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே, ஆக்கிரப்பு பணியை கைவிட வேண்டும் என கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், வனத்துறையினருடன், வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து கிராம நிர்வாக அலுவலர் மற்றும் வருவாய் அலுவலர்கள் சம்பவ இடத்துக்கு சென்று, இரு தரப்பினரிடமும் சமரசம் பேசினர்.பின்னர், நிலம் குறித்த ஆவணங்களை சரி பார்த்து, மாவட்ட அதிகாரிகளிடம் புகார் அளிக்கும்படி கூறினர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.



Tags : sanctuary ,forests ,Vedanthangal , Vedanthangal Sanctuary, Sheep Gardens, Outback Land, Forest Department, Public
× RELATED கோடியக்கரை வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்