×

மும்பையில் கொரோனா பாதிப்பு எதிரொலி: பணக்கார கணபதிக்கே இந்த ஆண்டு விழா இல்லை: அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெறும்

வடாலா: மும்பை நகரின் பணக்கார கணபதியாக கருதப்படும் வடாலா ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் நடத்தப்படும் கணபதி விழா பிப்ரவரி மாதத்துக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. மும்பையில் வரும் ஆகஸ்ட் 22ம் தேதியன்று கணபதி விழா தொடங்குகிறது. கட்டுக்கடங்காத கொரோனா வைரஸ் பரவல் மும்பை நகரை அச்சுறுத்தி வரும் நிலையில், இந்த ஆண்டு திட்டமிட்டபடி கணபதி விழா நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கணபதி விழா நடைபெறும் இடங்களில் ஒரே நேரத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடுவது வழக்கம். லால்பாக் ராஜா கணபதி மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகரை தரிசனம் செய்ய தினசரி லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருப்பார்கள்.

பெரும்பாலான கணபதி மண்டல்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விநாயகரை தரிசிக்க வருவார்கள் என்பதால், கொரோனா வைரஸ் தொற்று அதிகமாகும் அபாயம் உள்ளது. இதனால் இந்த ஆண்டு கணபதி விழாவை எப்படி நடத்துவது என்பது தொடர்பாக குழம்பி போயுள்ளன. இது தொடர்பாக அரசிடம் இருந்தோ மும்பை மாநகராட்சியிடம் இருந்தோ இதுவரை எந்த வழிகாட்டுதல்களும் வெளியிடப்படவில்லை. இதனால், கணபதி மண்டல்கள் இன்னும் விழாவுக்கான ஆயத்த வேலைகளை கூட தொடங்கவில்லை. இந்த நிலையில், மும்பை நகரின் பணக்கார கணபதி மண்டலாக கருதப்படும் வடாலா ஜி.எஸ்.பி. சேவா மண்டல் நிர்வாகிகள் இந்த ஆண்டு கணபதி விழாவை ஒத்திவைப்பது என முடிவு செய்துள்ளனர்.

கோவாவில் உள்ள ‘கோக்ரன் பர்தகலி ஜீவோத்தம் மடம்’ தலைவர் வித்யாதிராராஜ் சுவாமிஜி உத்தரவின் பேரில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவிருந்த கணபதி விழா அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் மாஹி கணேஷ் சதுர்த்தி(விநாயகர் பிறந்தநாள்) விழாவாக கொண்டாடப்படும் என்று ஜி.எஸ்.பி. சேவா மண்டல் அறக்கட்டளை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வடாலாவை சேர்ந்த ஜி.எஸ்.பி. சேவா மண்டல் கடந்த 65 ஆண்டுகளாக கணபதி விழாவை வெகு விமரிசையாக கொண்டாடி வருகிறது. மும்பையின் மிகப் பணக்கார கணபதி விழா கமிட்டியான ஜி.எஸ்.பி. சேவா மண்டல் சார்பில் பிரதிஷ்டை செய்யப்படும் விநாயகர் சிலை 65 கிலோ தங்க ஆபரணங்களால் அலங்கரிக்கப்படுவது வழக்கம்.

லால்பாக் ராஜா கமிட்டியின் நிலை என்ன?
மும்பையில் மிகப் பிரசித்தி பெற்ற லால்பாக் ராஜா கணபதி விழா கமிட்டியும் இந்த ஆண்டு கணபதி விழாவை நடத்துவது தொடர்பாக இன்னும் எந்தவொரு முடிவுக்கும் வரவில்லை. வழக்கமாக இந்த கமிட்டி சார்பில் நடத்தப்படும் விழாவுக்கான ஏற்பாடுகள் மற்றும் பந்தல் அலங்கார வேலைகள் மூன்று மாதங்களுக்கு முன்பே தொடங்கி விடும்.
இதே போன்று லால்பாக் அருகில் உள்ள புகழ்பெற்ற கணேஷ் கல்லி(தெரு) விழாக் கமிட்டியும் விழாவை நடத்துவது தொடர்பாக எந்த முடிவும் எடுக்கவில்லை.

அரசு தெரிவிக்கும் அறிவுறுத்தல்களை பொறுத்து விழாவை நடத்துவது குறித்து முடிவு செய்யப்படும் என்று லால்பாக் ராஜா கணபதி மண்டல் நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.
கணேஷ் கல்லி விழா கமிட்டி நிர்வாகி ஒருவர் கூறுகையில், ‘‘இந்த ஆண்டு வழக்கம் போல விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடந்தாலும் தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்’’ என்றார்.


Tags : Corona ,Mumbai ,festival ,Rich Ganapathi ,Rich kanapatikke Festival , Mumbai, Corona, Rich Ganapathi, Ganpati Festival
× RELATED ஐபிஎல் தொடர் சட்டவிரோதமாக...