×

மாநகராட்சி ஊழியர் சீருடையில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வழக்கறிஞர்கள் கைது

திருவொற்றியூர்: மீஞ்சூரில் இருந்து  சென்னைக்கு மாநகராட்சி ஊழியர் சீருடையில் மதுபாட்டில்கள் கடத்திய 2 வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர். எண்ணூர் முகத்துவார ஆற்றின் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, மாநகராட்சி ஊழியர் சீருடையில் பைக்கில் வந்த 2 பேரை மடக்கி விசாரித்தனர். அப்போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால், அவர்கள் பைக்கில் இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 36 குவாட்டர் மதுபாட்டில்கள் இருப்பது தெரியவந்தது. விசாரணையில் அவர்கள், காசிமேடு பகுதியை சேர்ந்த வேங்கையன் (37) மற்றும் வியாசர்பாடியை சேர்ந்த பாபு (40) என்பதும், இவர்கள் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் என்பதும் தெரியவந்தது.

மேலும், விசாரணையில், சென்னையில் ஊரடங்கு காரணமாக டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டு உள்ளதால், மீஞ்சூரில் இருந்து மதுபாட்டில்களை சென்னைக்கு கடத்தி வந்ததும், போலீசார் மடக்காமல் இருக்க, மாநகராட்சி ஊழியர் சீருடையில் வந்ததும் தெரிந்தது.  அவர்களை கைது செய்து, 36 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.  

* சூளைமேடு பகுதியில் மாவா விற்ற மேற்கு நமச்சிவாயபுரம் 2வது தெருவை சேர்ந்த நீலகண்டன் (38), அமைந்தகரை மஞ்சா தெருவை சேர்ந்த சனோஜ்குமார் (24) ஆகியோரை போலீசார் கைது செய்து, 3 கிலோ மாவா, 25 கிலோ சீவல், ரூ.20,590 உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனர்.
* வடசென்னையில் தொடர்ச்சியாக பைக் திருட்டில் ஈடுபட்ட திருவெற்றியூர் சின்ன மேட்டுப்பாளையம் ஒண்டி குப்பத்தை சேர்ந்த டில்லிபாபு (24), அரவிந்தன் (25) ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 5 பைக், ரூ.5 ஆயிரம், இரண்டரை சவரன் நகை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

வாட்ஸ்அப் குழுவில் கஞ்சா விற்றவர் பிடிபட்டார்
வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தி, அதன் மூலம் சென்னை அண்ணாசாலை பகுதியில் கஞ்சா விற்பனை செய்து வந்த, அண்ணாசாலை பார்டர் தோட்டம் கோபால்தாஸ் சாலையை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரி பிரகாஷ் (32) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

Tags : lawyers ,liquor stores , Municipal employee, liquor bar, 2 lawyers arrested
× RELATED நீதிமன்றத்தை புறக்கணித்து வழக்கறிஞர்கள் போராட்டம்