×

அதிகம் பாதிக்கப்பட்ட 8 மண்டலங்களில் 3000 படுக்கையுடன் தனிமை வார்டு: மாநகராட்சி உத்தரவு

சென்னை: சென்னை மாநகராட்சியில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள 8 மண்டலங்களில் 3000 படுக்கைகளுடன் தனிமைப்படுத்துதல் மையங்களை அமைக்க சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: கொரோனா தடுப்பு பணியில் அனைத்து ஊழியர்களும் சிறப்பாக பணியாற்றி வருகின்றனர். வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த பல்வேறு புதிய வழிமுறைகளில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக சமூகத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் குடிசைப் பகுதிகளில் வசிப்பவர்களை தங்க வைக்க தனிமைப்படுத்துதல் மையங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பகுதிகளில் ஒருவருக்கு பாதிப்பு ஏற்பட்டால் மற்றும் அவருடன் தொடர்பில் இருந்த மற்றவர்களை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்றினால் தொற்று பரவாமல் இருக்கும். ஏற்கனவே மையங்கள் அமைக்கப்பட்டுள்ள பள்ளி, கல்லூரிகளை தவிர்த்து மீதமுள்ள நடுநிலை மற்றும் தொடக்கப் பள்ளிகள், மாநகராட்சி சமூக கூடங்கள், தனியார் கல்யாண மண்டபங்கள் ஆகியவற்றை கண்டறிந்து இந்த மையங்கள் அமைக்க வேண்டும். இதன்படி கண்டறியப்பட்ட மையங்களில் தூய்மை பணிகளை முடித்து 29ம் தேதி குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.

இதன்படி அதிகம் பாதிக்கப்பட்டுள்ள தண்டையார்பேட்டை, ராயபுரம், திருவிக நகர், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், அடையாறு உள்ளிட்ட எட்டு மண்டலங்களில் மண்டலத்திற்கு தலா 3000 படுக்கை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். மீதமுள்ள ஏழு மண்டலங்களில் தலா 1,500 படுக்கை வசதியை ஏற்படுத்த வேண்டும். இந்த உத்தரவை மிக அவசர உத்தரவாக எடுத்துக்கொண்டு மண்டல அலுவலர்கள் பணிகளை தொடங்க வேண்டும். வட்டார துணை ஆணையர்கள் இந்த பணியை கண்காணிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

* தனிமைப்படுத்துதல் மையங்களில் உள்ளவர்கள் - 496
* கோவிட் கேர் மையங்களில் உள்ளவர்கள்- 1377
* வெளி மாநிலத்தவருக்கான தனிமைப்படுத்துதல் மையங்களில் உள்ளவர்கள் - 318
* வெளிநாட்டினருக்கான தனிமைப்படுத்தும் மையங்களில் உள்ளவர்கள் - 95

Tags : zones , 8 zones, 3000 bed, isolation ward, corporation
× RELATED மாநில அளவில் ஈட்டி எறிதல் முதலிடம்...